டி.டி.வி. தினகரன் சட்டமன்ற அலுவலகத்தில் இரவில் வீசப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள்! | ttv dinakaran mla office protest news

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (09/03/2019)

கடைசி தொடர்பு:13:19 (09/03/2019)

டி.டி.வி. தினகரன் சட்டமன்ற அலுவலகத்தில் இரவில் வீசப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள்!

 தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வீசப்பட்ட 20 ரூபாய் நோட்டுக்கள்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான டி.டி.வி.தினகரன் அலுவலகத்தில் குவிந்த  பெண்கள், 20 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்குப் பின்னணியில், அ.தி.மு.க-வினர் இருப்பதாக அ.ம.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர். 

 உலக மகளிர் தினத்தையொட்டி, வடசென்னை அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு ஏராளமான பெண்கள் வந்தனர். அவர்களின் கையில் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் வீசினர். 20 ரூபாய் நோட்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் சிதறிக்கிடந்தன. 

 தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 20 ரூபாய் நோட்டுக்களை வீச குவிந்த பெண்கள்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில்,  ``20 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கும்போதாவது துட்டு கொடுத்திருக்கலாம். பொய் சொல்லி எதற்கு எங்களிடம் ஓட்டு வாங்கினார்கள். தொகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற பிறகு தொகுதிப் பக்கமே தினகரன் வரவில்லை. இதனால்தான், 20 ரூபாய் நோட்டுகளை எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் வீசியுள்ளோம்" என்று ஆவேசத்துடன் கூறினர். ரூபாய் நோட்டுகளை சில ஆண்களும் எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் வீசிவிட்டுச் சென்றனர். ரூபாய் நோட்டுகளை எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் வீசியதன் பின்னணியில் அ.தி.மு.க-வினர் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை அ.தி.மு.க-வினர் மறுத்துள்ளனர். 

வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்  

இதுகுறித்து வடசென்னை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ராஜேஷிடம் கேட்டதற்கு, ``தொகுதியின் எம்.எல்.ஏ-வான தினகரன், கடமையைச் செய்யவில்லை. வாரா வாரம் மக்களைச் சந்திப்பதாக தினகரன் கூறினார். ஆனால், வெற்றிபெற்ற பிறகு மக்களை அவர் சந்திக்கவில்லை. 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது நாட்டுக்கும் ஊருக்கும் தெரியும். குற்றம் சாட்டுவது முக்கியமல்ல. மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை முதலில் தினகரன் செய்துகொடுத்துவிட்டு, தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்குச் செல்லட்டும். நல்லவன் என்று அவர் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். 

 குற்றம் சுமத்தி, பிரச்னைகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள்  திசைதிருப்பிவருகின்றனர். வெற்றிவேலுக்கு அ.தி.மு.க-வின் பாரம்பரியத்தைப் பற்றி என்ன தெரியும்.  அவர் மாற்றுக்கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர். தினகரனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இந்த ஆட்சியை தினகரன் கவிழ்க்கப்பார்த்தார். அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னைச் சந்தித்து மக்கள் தங்களின் குறைகளைச் சொல்லிவருகிறார்கள். தினம் தினம் ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களைச் சந்தித்துவருகிறேன். ஆர்.கே.நகரில் சில பகுதிகளைத் தத்தெடுத்து, பணிகளைச் செய்துவருகிறோம். இதனால், மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மக்களின் குறைகளைக் கேட்டு, அதைச் சரிசெய்து கொடுத்துவருகிறேன். 

 வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்

சொல்லிக்கொடுத்து செய்ய ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குழந்தைகள் அல்ல. தினகரன் தரப்பினர் விதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கான அறுவடையை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். தினகரன் தரப்பினருக்கு பதில் சொல்ல அவர்கள் தகுதியற்றவர்கள். அவைத் தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க-வின் தூண். போலியான வாக்குறுதிகளை யார் கொடுத்தாலும் தட்டிக்கேளுங்கள் என்று மக்களிடம் சொல்லிவருகிறோம். என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் சேவை செய்துவருகிறேன். யார் வேண்டுமென்றாலும் யார் மீதும் குற்றம் சாட்டலாம். 20 ரூபாய் நோட்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் வீசப்பட்ட சம்பவத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார். 

 தினகரன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் வெற்றிவேல்

இதுகுறித்து டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல் கூறுகையில், ``மாவட்டச் செயலாளர் ராஜேஷ், அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோரின் செட்டப்.  30, 40 பேர் வந்து 20 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் எம்.எல்.ஏ அலுவலகத்துக்குச் சென்றோம். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். எம்.எல்.ஏ அலுவலகத்தின் அருகிலேயே போலீஸ் பூத் இருக்கிறது. அவர்களுக்குக்கூட தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் மதுசூதனன், ராஜக்‌ஷை கைதுசெய்வார்களா... மதுசூதனன் அன் கோ தான் ஆளை தூண்டிவிட்டு இப்படிச் செய்கிறார்கள். தூண்டிவிட்டு செய்வது நடக்கும். காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எல்லாம் சரியாகிவிடும்" என்றார். 

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ  டி.டி.வி.தினகரன் அலுவலகத்தில் பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


[X] Close

[X] Close