பெண்களின் மாதவிடாய் வலிகள் - பாடல் வெளியிட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள்..! | song released by Coimbatore Government arts college students

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (09/03/2019)

பெண்களின் மாதவிடாய் வலிகள் - பாடல் வெளியிட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள்..!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை அடிப்படையாகக்கொண்டு, கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இனிதி

மாதவிடாய் காலங்களில், பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக்கொண்டு கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் 'இனிதி' என்ற பெயரில்  நான்கு நிமிட பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இந்தப் பாடலை  கடந்த மூன்று மாதங்களாக மாணவ, மாணவிகள் வடிவமைத்துள்ளனர். அரசுக் கல்லூரி கணிதத் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஹரிப்பிரியா, பாடல்வரிகளை அமைத்திருக்க , அதே கல்லூரியில் பொது நிர்வாகத் துறை மாணவர் திலக் கவிக்கரன் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை யூ டியூபில் பதிவேற்றியுள்ளனர். பெண் என்றால் இனியவள் என்பதை உணர்த்தும் விதமாக 'இனிதி' என்று இந்த ஆல்பத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி ஹரிப்பிரியா கூறுகையில், “முகம் சுளிப்பதற்காக இல்லையப்பா. உணர்ந்துகொள் சொல்வது தப்பா'' என்று தான் இந்தப் பாடல் தொடங்கும். உணர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இன்றைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் பாடலை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் இத்தனை நாள்களாகப் பெண் சுதந்திரத்தை ஆண்கள்தான் பேசி வருகின்றனர். பெண் சுதந்திரம்குறித்து பாரதியாரும் பெரியாரும்தான் கனவு கண்டனர். பெண்களின் கனவை பெண்கள்தான் காண வேண்டும். அந்தக் கனவை பெண்கள் அனைவரின் முன்பும் தைரியமாக எடுத்துவைக்க வேண்டும்” என்றார்.

மாதவிடாய் பாடல்

அரசுக் கல்லூரி மாணவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

 

 

 


[X] Close

[X] Close