‘தூத்துக்குடியில் அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை கொடுத்த பெற்றோர்கள்!’- மாணவர்கள் உற்சாகம் | Parents who Donate Equipment's to Thoothukudi Govt School

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/03/2019)

கடைசி தொடர்பு:17:40 (09/03/2019)

‘தூத்துக்குடியில் அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை கொடுத்த பெற்றோர்கள்!’- மாணவர்கள் உற்சாகம்

தூத்துக்குடி மாவட்டத்தில், 3 பள்ளிகளில் கிராம மக்கள் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை மேளதாளம் முழங்க சீர்வரிசையாக எடுத்துச்சென்று வழங்கிய, 'கல்விச்சீர் வழங்கும் விழா' நடைபெற்றது.

மாணவர்கள்

அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்களைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வழங்கிவந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், அரசுப் பள்ளி வகுப்பறைகள் தனியார்  பள்ளி வகுப்பறைகளுக்கு இணையாக நவீனமாக மாற்றப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் நடந்த  இதுபோன்ற கல்விச்சீர் திருவிழா, தற்போது தமிழகத்தில் பரவலாகப்  பல கிராமங்களில் நடைபெற்றுவருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் வெம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 82 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், பள்ளிக்குத் தேவையான பொருள்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல, ஆசிரியர்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளின் தேவைகள்குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளின் தேவைகுறித்து எடுத்துக்கூறினர். இந்நிலையில், பீரோ, நாற்காலி, எழுதுபொருள்கள், குடிநீர் ட்ரம், தலைவர்கள் படங்கள், நோட்டுகள், பேனா, பென்சில்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி பள்ளி

ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பி, மேள தாளத்துடன் பள்ளிக்கு சீர்வரிசைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இப்பள்ளிக்கு அரசு வழங்கிய கணினி தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ரூ.32ஆயிரம் மதிப்புள்ள குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல,  ஏரல் தாலுகாவில் உள்ள அரியபுரம், அதிசயபுரம், லட்சுமிபுரம் ஆகிய கிராமத்திலுள்ள மாணவ மாணவிகள், இப்பள்ளியில் படிக்கிறார்கள். மக்களின் பங்களிப்புத் தொகையால், தேவையான உபகரணங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதேபோல, தூத்துக்குடி மாநகராட்சி துவக்கப் பள்ளியிலும் இதேபோன்று பெற்றோர்கள், தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பால் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

கல்விச் சீர் விழா

இதுகுறித்து ஆசிரியர்கள் பேசுகையில், “கிராமக் குழந்தைகளின் கல்வியை  ஊக்குவிக்கும் விதமாக, கல்விச்சீர் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது, மாணவர்களின் கல்விக்குப் பெரிய உதவியாக இருக்கும்” என்றார். “மாணவ மாணவிகளின் சேர்க்கை போதுமான அளவில் இல்லாததால்தான் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இதேபோல, நிலைமை எங்க கிராமத்திலுள்ள பள்ளிகளுக்கு வந்துவிடக் கூடாது எனவும், பள்ளியை மேம்படுத்தும் வகையிலும் இதுபோன்ற சீர்வரிசைகள் வழங்கியுள்ளோம். இதனால், தனியார் பள்ளி க்கு இணையாக அரசுப் பள்ளி வகுப்பறைகளும் தரம் உயரும். மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த இது ஒரு சிறப்பான முயற்சி. எல்லா கிராம மக்களும் அந்தந்த கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு இதுபோன்ற சீர்வரிசைகள் அளிக்க முன்வர வேண்டும்.” என்றனர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close