‘‘362 பதற்றமான வாக்குச்சாவடிகள்; 39 பறக்கும் படை!’’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரான வேலூர் | Vellore ready for the parliamentary election

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (16/03/2019)

‘‘362 பதற்றமான வாக்குச்சாவடிகள்; 39 பறக்கும் படை!’’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரான வேலூர்

வேலூர் மாவட்டத்தில், 362 வாக்குச்சாவடிகள் ‘பதற்றமானவை’ எனக் கண்டறியப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களை வசியப்படுத்துவதைத் தடுக்க 39 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்திருக்கிறார்.

வேலூர் கலெக்டர் ராமன்

நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, வேலூர் கலெக்டர் ராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். 3,473 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பணியில், மொத்தம் 16 ஆயிரத்து 949 நபர்கள் ஈடுபடுகிறார்கள். 9,360 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,960 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் 5,942 வி.வி.பி.ஏ.டி கருவிகள், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு பாதுகாப்பு கிடங்குகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக வந்திருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன இன்ஜினீயர்கள் மூலம் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடக்கிறது. 

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,  வாக்குச்சாவடி மையங்கள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. 362 வாக்குச்சாவடிகள் ‘பதற்றமானவை’ என்று கண்டறியப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில், மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படை குழுக்கள், 39 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம், பேரணியைப் பதிவுசெய்ய 26 காணொளி கண்காணிப்பு குழுக்களும், இந்த பதிவுகளை செலவின பார்வையாளரிடம் சமர்ப்பிக்கக் 13 குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 13 உதவி செலவின பார்வையாளர் குழு மற்றும் 13 உதவி கணக்கு தணிக்கை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை வசியப்படுத்தப் பணம், பொருள் வழங்குவது போன்ற தேர்தல் குற்றங்களை தடுக்கப் பறக்கும் படையினர் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்’’ என்றார்.


[X] Close

[X] Close