‘28 ஆண்டுகள் அநீதி போதாதா; 7 தமிழர்களை விடுதலை செய்திடுக’ - சென்னையில் மனித சங்கிலி போராட்டம் | human chain protest in Chennai to release seven Tamilians

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/03/2019)

கடைசி தொடர்பு:19:40 (09/03/2019)

‘28 ஆண்டுகள் அநீதி போதாதா; 7 தமிழர்களை விடுதலை செய்திடுக’ - சென்னையில் மனித சங்கிலி போராட்டம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மனித சங்கிலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற குரல் நாடேங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதற்காக பேரறிவாளனின் தயார் பல்வேறு போராட்டங்களையும், பேரணியையும்  நடத்திவருகிறார்.

அற்புதம்மாள்

28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், சட்டபிரிவு 161-ஐ பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தது. உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சட்டமன்றத்தில் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்த தீர்மானத்தை ஆளுநருக்கும் அனுப்பியாகிவிட்டது. தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்  ஏழுவர் விடுதலை சாத்தியம். ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல்  காலம் தாழ்த்தி வருகிறார்.

அன்புமணி

இதன்காரணமாக, அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதேபோல, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு தரப்பினருக்கு  அழைப்பு விடுத்தார். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.

போராட்டம்

இதில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.வி.க, பா.ம.க, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மேலும் அமமுகவின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி,சேலம், மதுரை, கோவை  உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துள்ளது.


[X] Close

[X] Close