`தமிழகத்தில் இருந்து விற்பனைக்குக் குவியும் ப்ளஸ் 11 வகை வைரங்கள்?’ - ஜெயலலிதா பெயரில் சர்ச்சை | +11 diamond's prices crashed after stock flooded from Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (09/03/2019)

கடைசி தொடர்பு:20:03 (09/03/2019)

`தமிழகத்தில் இருந்து விற்பனைக்குக் குவியும் ப்ளஸ் 11 வகை வைரங்கள்?’ - ஜெயலலிதா பெயரில் சர்ச்சை

தமிழக வியாபாரிகளிடம் இருந்து மும்பை தரகர்கள் வாயிலாக சூரத் வைர சந்தையில் ப்ளஸ் 11 (+11)வகை வைரங்கள் அதிக அளவுக்கு விற்பனைக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், வைரங்களின் விலை 30 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

வைரம்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ப்ளஸ் 11 ரக வைரங்கள் 2000 கேரட் அளவுக்கு வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மும்பையில் உள்ள குறிப்பிட்ட வைர வியாபாரிகள் மற்றும் தரகர்கள் வாயிலாக அந்த வைரங்கள் பெரிய அளவில் வாங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்த வைரங்கள் தற்போது மும்பை வியாபாரிகள் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற ஒரு தகவலும் வெளியாகியிருக்கிறது. 

வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் குஜராத்தின் சூரத் நகரம் மிகவும் புகழ்பெற்றது. வைரங்கள் வெட்டியெடுக்கப்படுவதுடன் பட்டைதீட்டுவதற்கும் சூரத் நகரம் உலக அளவில் பெயர்பெற்றது. வைரச் சந்தையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ப்ளஸ் 11 ரக வைரங்களின் வரத்து அளவுக்கு அதிகமாக இருந்தது என்கிறார்கள். ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ப்ளஸ் 11 ரக வைரங்களின் வரத்து அதிகரித்ததால், அதன் விலை 30 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது என்கிறார்கள் வியாபாரிகள். 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் பேசிய வியாபாரிகள், `ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை மற்றும் அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார மந்தநிலைகள் போன்ற காரணங்களால் வைரத்தில் விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தநிலையில், பாலீஷ் செய்யப்பட்ட ப்ளஸ் 11 ரக வைரங்கள் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு வருவதால், மேலும் 30 சதவிகிதம் வரை விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த வகை வைரங்களைக் கடந்த 2016ல் குறிப்பிட்ட விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதைத் தற்போது மிகவும் குறைவான விலைக்கு மும்பை தரகர்கள் வாயிலாக விற்பனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதனால், வைர சந்தை மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது’ என்கிறார்கள்.

வைரம் 

`ப்ளஸ் 11 ரக வைரங்கள், சந்தையில் பிரபலமானவை. சூரத்தில் தயாரிக்கப்படும்  இந்த வகை வைரங்கள் பெரும்பாலும் ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு மொத்தமாக வைரங்கள் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் அது சந்தையை பெரிய அளவில் பாதிக்கும்’’ என்கிறார் சூரத்தின் மஹிதாபூரா பகுதியைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹ்ஜி பலாலா. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய சூரத் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பாபு குஜராத்தி, `பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பெரும் பணக்காரர்கள் பலர் தங்களது கருப்புப் பணத்தில் வைரங்களை வாங்கிக் குவித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. நீண்டகால முதலீடாக அவர்கள் வைரத்தை வாங்கியிருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அரசியல்வாதிகளுக்கு வைரங்களை அதிகளவில் வியாபாரிகள் விற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு 2,000 கேரட்டுக்கும் அதிகமான வைரத்தை விற்றிருக்கிறார்கள். அவை மும்பையில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன. இது சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறியிருக்கிறார். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாகவே, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், நவம்பரில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வைரங்களை வாங்கியது யார்?. அந்த வைரங்கள் தற்போது யார் மூலமாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று பல்வேறு கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

News Credits: Times Of India
 


[X] Close

[X] Close