`தமிழ் மொழியையா வளர்த்தீர்கள்? கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள்!' - தமிழிசை | Tamilisai slams dmk

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (10/03/2019)

கடைசி தொடர்பு:12:18 (16/03/2019)

`தமிழ் மொழியையா வளர்த்தீர்கள்? கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள்!' - தமிழிசை

”எங்கள் கூட்டணி பிரம்மாண்ட கூட்டணி. இரட்டை இலை தாமரையை தாங்கிக்  கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. அதனால், நிச்சயமாக  எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்.” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க., கொடியை ஏற்றி வைத்து மோடியின் திட்டங்கள் குறித்துப் பேசி, தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். மூன்றாவது நாளான இன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பா.ஜ.க., நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவில்பட்டியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் அவர் பேசுகையில், ”மக்களுக்கு எதுவும் நல்லது செய்யாத கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி. அதனால் அது தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி. ஏழைகளுக்கு கிடைக்கும்  உதவிகளை தடுக்கும் தி.மு.க., காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நாங்கள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம்.

தமிழிசை

அ.தி.மு.க., தொண்டர்கள்,  அமைச்சர்கள் அனைவரும் எங்களுடன் சுமூகமான உறவில் உள்ளனர். அம்மா இல்லையென்றாலும் ஒரு தந்தையை போல மோடி எங்களைப் பாதுகாக்கிறார் எனவும் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணி ஒற்றுமையாகத்தான்  இருக்கிறது. சில பேர் கருத்து சொல்லும்போது வேறு மாதிரி சொல்லலாம். ஆனால், நாங்கள் மனதளவிலும், கொள்கை அளவிலும் ஒன்றாகவே இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்ப்போம். அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம். நிச்சயமாக  எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்.

 நாங்கள் நல்ல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்திருக்கிறோம். இதனைக்கண்டு தி.மு.க.,வினர் மிரண்டு போய் உள்ளனர்.  வழக்காடு மன்றத்தில் ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வரவில்லை என சிலர் கேட்கிறார்கள்.  காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது. மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. ஆனால், ஏன் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரவில்லை. தமிழ் மொழியையா நீங்கள் வளர்த்தீர்கள்? கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள்.

தமிழிசை

காங்கிரஸ்காரர்கள் காமராஜரை ஒதுக்கி வைத்தவர்கள். காமராஜரை பற்றி பேச தகுதியுள்ள ஒரே தலைவர் மோடிதான். நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க., பலம்  பெற வேண்டும். இரட்டை இலை தாமரையை தாங்கிக்  கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் மிக விரைவில் எல்லாக் கூட்டணியும்  அறிவிக்கப்பட்டு விடும் அந்த வகையில் இது பிரம்மாண்ட கூட்டணி . இதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் தான் எதிர்கட்சியினர் பதட்டத்தோடு இருக்கிறார்கள்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close