குடிப்பழக்கத்தை நிறுத்த வேற வழி தெரியலை! - கோயில் வாசலில் தீக்குளித்த முதியவர் | 56 year old men got suicide near erode

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (10/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (10/03/2019)

குடிப்பழக்கத்தை நிறுத்த வேற வழி தெரியலை! - கோயில் வாசலில் தீக்குளித்த முதியவர்

தீக்குளிப்பு

ஈரோடு மாவட்டம், பழையபாளையம் அம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (56). இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பைக்கில் வேஷ்டி, லுங்கி போன்றவற்றை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து குடும்பத்தை முரளிதரன் நடத்தி வந்திருக்கிறார். முரளிதரனுக்கு இருக்கும் குடிப்பழக்கத்தினை கைவிடச் சொல்லி, அவருடைய மனைவியும், மகன்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றனர். அதனையடுத்து, குடிப்பழக்கத்தைக் கைவிடும் முடிவிற்கு வந்தவர், சமீபத்தில் குடிமீட்பு சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். சிகிச்சை பெற்ற போதிலும் முரளிதரனால் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.
குடும்பத்தாரின் விருப்படி நடந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் அவரை வாட்டியிருக்கிறது. 

இந்தநிலையில், நேற்று காலை சுமார் 8.20 மணியளவில் ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வந்தவர், பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து உடம்பில் ஊற்றியிருக்கிறார். காலை நேரம் என்பதால், அவருடைய செய்கையை பொதுமக்கள் பெரிதாக கவனிக்கவில்லை. பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு சொட்ட சொட்டக் கொஞ்ச தூரம் நடந்து சென்றவர், சாலையில் சென்ற ஒருவரிடம் தீப்பெட்டி கேட்க, அவரும் கோயில் வாசலில் நின்று கேட்டதால் எதுவும் யோசிக்காமல் எடுத்து நீட்டியிருக்கிறார்.

தீப்பெட்டியை வாங்கிய அடுத்த கனமே, எந்தவித சலனமுமில்லாமல் அதனை உரசி உடம்பில் பற்ற வைத்த முரளிதரன், தீயின் கொடூரம் தாங்க முடியாமல் கோயில் வாசலுக்கு முன்பே அங்குமிங்கும் ஓடி கதறியிருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீப்பற்றி எரிந்த முரளிதரன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்து, ஆம்புலன்ஸை வரவழைத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 70 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரளிதரனைப் பார்த்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கதறியழுத சம்பவம் பார்ப்போரை கலங்கடித்தது. 

குடிப்பழக்கத்தைக் கைவிட வேறுவழி தெரியாமல் தவித்து வந்தவர், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோயில் முன்பு உயிரை மாய்த்துக் கொள்ள தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களை உயிரைக் குடிக்கும் இந்த மதுவை அழிக்காமல், அரசு இன்னும் எத்துனை நாட்கள் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ!...


[X] Close

[X] Close