தூத்துக்குடி கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல்சிற்பம்! - ஆர்வத்துடன் கண்டுகளித்த மக்கள் | Sand sculpture in thoothukudi beach for election awareness

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (10/03/2019)

கடைசி தொடர்பு:12:18 (16/03/2019)

தூத்துக்குடி கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல்சிற்பம்! - ஆர்வத்துடன் கண்டுகளித்த மக்கள்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

மணல் சிற்பம்

தமிழகம் முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்யும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலின் நோக்கம், எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக் கூடாது என்பதுதான்.

சிற்பம்

அதே போல, 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக  பல்வேறு  சிறப்பு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் 18 வயதான மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்திட, அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்த வேண்டும். அத்துடன் தேர்தலிலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தங்கள் கல்லூரிகளில் 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துள்ளார்களா என்பதை உறுதியளித்து சான்றிதழ் வழங்கிட வேண்டும் என கல்லூரி தூதுவர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

விழிப்புணர்வு

இது தவிர, இந்த தேர்தலில் மற்றொரு முக்கிய அம்சமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்கினை சிரமமின்றி செலுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தலில் மக்கள் தங்களது வாக்கினை 100 சதவீதம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குப்பதிவு மற்றும் ஜனநாயக கடமையை உணர்த்தும் வகையில் இந்த சிற்பத்தினை சிற்பி அமைத்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முத்துநகர் கடற்கரையும் ஒன்று. அதனால், இங்கு வரும் மக்கள் மணல் சிற்பத்தின் மூலமாக சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கி விழிப்புணர்வு அடைவர்.” என்றார்.

சசிவர்மன்

இந்த மணல் சிற்பத்தை உருவாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் ஒசரவிளையைச் சேர்ந்த சிற்பி சசிவர்மாவிடம் பேசினோம், “வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக கடமைகளில் ஒன்று. அதனை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி கடற்கரையில் இந்த மணல் சிற்பத்தை அமைத்துள்ளேன். இந்த சிற்பத்தில் முதலவாதாக இருப்பது மாற்றுத்திறனாளிகளைக் குறிக்கும். வரும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதனால், மாற்றுத்திறனாளிகளும் தவறாமல் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்பதை முதன்மையாக கொண்டு உருவாக்கியுள்ளேன்.  இந்த மணல் சிற்பத்தை அமைக்க 5 மணி நேரம் ஆனது. இதுபோன்று பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்வுகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மணல் சிற்பத்தினை அமைத்துள்ளேன்.” என்றார். இந்த மணல் சிற்பத்தினை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close