`கேட்காமல் கொடுப்பது தான் பெரிய விஷயம்' - ரஜினியின் ஆதரவு குறித்து கமல் நம்பிக்கை! | kamal hassan speak about parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (10/03/2019)

கடைசி தொடர்பு:12:19 (16/03/2019)

`கேட்காமல் கொடுப்பது தான் பெரிய விஷயம்' - ரஜினியின் ஆதரவு குறித்து கமல் நம்பிக்கை!

கடந்த வருடம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் அதன் பின்னர் மக்கள் சந்திப்பு, கிராம சபை கூட்டம், கட்சியை மக்களிடம் கொண்டு சேர்பது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக  மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளது இவரின் கட்சி. இதற்காக விருப்ப மனுக்கள் பெறபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்

இது பற்றி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் பேசும் போது, “ எங்களின் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. நல்லவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என முன்னதாக கூறியிருந்தோம் அதன் படி நிறையப் பேர் நீக்கப்பட்டுவிட்டனர். நாங்கள் முதலில் கூறிய வார்த்தைகளில் இருந்து சற்றும் மாறுபடவில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமான கூட்டணி, மக்கள் கூட்டணி. மக்களுக்காக அமையவுள்ள ஆட்சியில் அவர்களுடன் கூட்டணி வைப்பதுதான் நியாயம். 

எங்களின் தேர்தல் அறிக்கையைப் படிக்கும் போது முதலில் எங்களுக்கு நம்பிக்கை வரும் வகையில், மனசாட்சி படி இதை மக்களிடம் அறிவிக்கலாமா இதில் எத்தனைப் பொய் உள்ளது, எத்தனைச் சாத்தியம் என்பதை நாங்கள் முதலில் புரிந்துகொண்டு நிகழ்த்திக்காட்டக் கூடிய வகையில் புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அவை அறிவிக்கப்படும்.  வரும் 11 முதல் 15-ம் தேதி வரை மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெறவுள்ளது. மொத்தம் 937 மனுக்கள் வந்துள்ளன. அவற்றில் சிறந்தவர்களை தேர்வு செய்து பிறகு பெருமையுடன் மார்தட்டி தொகுதிகளுடன் சேர்த்து அறிவிப்போம்.  

சட்டம் என்பது வேறு அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அனைவருக்கும் கருணை என்பது உண்டு கருணையை காட்ட வேண்டியவர்கள் நிச்சயம் அதைத் தாராளமாக காட்டலாம். சட்டம் தன்னிச்சையாக செயல்படவேண்டும். ஏழு பேரின் விடுதலையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம் ஏழரை கோடி பேரின் விடுதலையைப் பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை’ எனக் கூறினார்.

பிறகு ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, “ஆதரவு கேட்பதை விடக் கொடுப்பது தான் சிறந்தது. கேட்பது என்பது இரு தரப்பினருக்கும் ஒருவித கூச்சத்தை ஏற்படுத்தும். அதனால் கேட்காமல் கொடுப்பதுதான் சிறந்த விஷயம். அதே போல் கேட்காமல் பெறுவதும் சிறந்த விஷயம். ரஜினி எனக்கு ஆதரவு அளிப்பார் என நான் நம்புகிறேன்’ எனப் பதிலளித்தார். 


[X] Close

[X] Close