ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் 5.20 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் - அன்வர் ராஜா தொடங்கி வைத்தார்! | Anwararaja launched the development works at the Rameshwaram railway station at a cost of Rs 5.20 crore

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (10/03/2019)

கடைசி தொடர்பு:14:40 (10/03/2019)

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் 5.20 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் - அன்வர் ராஜா தொடங்கி வைத்தார்!

 ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா துவக்கி வைத்தார்.

மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை, மத்திய சுற்றுலாத்துறையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக வெளி வளாகப் பகுதி அகலப்படுத்தப்பட்டு பயணிகள் எளிதாக ரயில் நிலையத்துக்குள் சென்று வரும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. பயணச்சீட்டு பதிவு அலுவலகத்திற்கு முன்பு பயணிகள் காத்திருக்கும் பகுதி அளவு குறைவாக இருந்ததால் பயணிகள் வசதிக்காக அதுவும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் காத்திருப்பு பகுதியிலிருந்து நடைமேடைக்குச் செல்லும் குறுகலான நுழைவு வாயிலில் பயணிகள் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு அந்த நுழைவாயில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் ரயில் பயணம் குறித்த விசாரணைகளுக்காக காத்திருப்புப் பகுதியில் புதிய விசாரணை மைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் அலுவலகம் ஒன்று காத்திருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு வசதிகளை துவக்கி வைத்த அன்வர்ராஜா 


இதே போன்று நடைமேடையில் உணவு மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த உணவு கடைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. காலி தண்ணீர் பாட்டில்களை கையாளுவதற்காக நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கிய 2 பேட்டரி கார்களின் சேவையும் துவக்கி வைக்கப்பட்டது. புதிய நவீன பயணிகளின் உடைமைகள் காப்பு  அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகரத்தின் பண்பாட்டுப் பாரம்பாரியத்தை நினைவு படுத்தும் வகையில் புகழ்பெற்ற அமர் சித்ர கதா நிறுவனம் வழங்கிய ராமேஸ்வரத்தின் சிறந்த மைந்தன் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ராமாயணத்தின் முக்கிய பகுதிகளின்  இரண்டு ஓவியங்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 
 ரூ.5.20 கோடி மதிப்பிலான இந்த புதிய வசதிகளை ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  அன்வர்ராஜா ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில்  துவக்கி வைத்தார். விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செல்வி நீனு இட்டியரா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்  ஓ பி ஷாவ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன்,  கோட்ட பொறியாளர் பாஸ்கர்,  ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வீரசுவாமி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் .


[X] Close

[X] Close