`இந்தியாவிலேயே இரண்டாவது பணக்காரக் கட்சி தமிழகத்தில்!’ எது..? #GuessRight | This party is the second richest party in India

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (10/03/2019)

கடைசி தொடர்பு:08:36 (11/03/2019)

`இந்தியாவிலேயே இரண்டாவது பணக்காரக் கட்சி தமிழகத்தில்!’ எது..? #GuessRight

`இந்தியாவிலேயே இரண்டாவது பணக்காரக் கட்சி தமிழகத்தில்!’ எது..? #GuessRight

`இந்தியாவிலேயே இரண்டாவது பணக்காரக் கட்சி’ என்கிற அந்தஸ்தை தி.மு.க பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தில் மாநிலக்கட்சிகள் சமர்ப்பித்துள்ள 2017 - 2018-ம் ஆண்டுக்கான வருவாய் செலவினக் கணக்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாடிக் கட்சிக்கு அடுத்த பணக்காரக் கட்சி என்ற நிலையை தி.மு.க பெற்றுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, ஒவ்வோர் ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்களின் வருவாய் செலவினக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். 37 மாநிலக் கட்சிகளின் 2017 - 2018-ம் ஆண்டுக்கான வருவாய்க் கணக்கு விவரங்கள், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளை ஆய்வு செய்த `அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்’ என்னும் தன்னார்வ அமைப்பு, ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் வருவாய் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது, எந்தக் கட்சி அதிகமாகச் செலவு செய்துள்ளது, அந்தக் கட்சிகளுக்குப் பணம் எந்தவழியில் வருகிறது என்பனவற்றைக் கண்டறிந்துள்ளது. 

அந்த ஆய்வு முடிவுகளின்படி, 2017-18-ம் ஆண்டுக்கான 37 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் 237.27 கோடி ரூபாயாகும். அதில் சமாஜ்வாடி கட்சி 47.18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 35.748 கோடி ரூபாய் வருவாயுடன் தி.மு.க. இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள மாநிலக் கட்சிகளின் வருவாயில் தி.மு.க பெற்றிருக்கும் தொகையானது 15.07 சதவிகிதமாகும். மூன்றாமிடத்தைப் பிடித்துள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 27.27 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த மூன்று கட்சிகள் மட்டுமே, இந்தியாவிலுள்ள மாநிலக் கட்சிகள் வசூலித்திருக்கும் மொத்த வருவாயில் 46.45 சதவிகித்தை வசூலித்துள்ளன.

2016-17-ம் ஆண்டில் வெறும் 3.78 கோடி ரூபாய் வருவாய் பெற்றிருந்த தி.மு.க, ஒரே ஆண்டில் 845.71 சதவிகிதம் அதிகளவு வருவாய் ஈட்டி, 35.748 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உறுப்பினர் கட்டணம் மற்றும் ஆண்டுச் சந்தா மூலமாக 22.14 கோடி ரூபாயும், வங்கிகளில் உள்ள இருப்புகளில் கிடைக்கும் வட்டியாக 11.779 கோடி ரூபாயும், கட்சி வளர்ச்சி நிதியாக 1.269 கோடி ரூபாயும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர வருமானம் 56 லட்ச ரூபாய் என்று தெரிவித்து, ஒரே ஆண்டில் 35.748 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், மு.க.ஸ்டாலின் தி.மு.க செயல் தலைவராகப் பதவியேற்றதுக்கு பிறகும் தி.மு.க-வின் வருமானம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க வருவாய் குறைந்தது!

அ தி மு க எடப்பாடி - ஓ.பி.எஸ்அதேவேளையில், அ.தி.மு.க-வின் வருவாய் 2016-17-ம் ஆண்டில் இருந்ததைவிட 73.96 சதவிகிதம் குறைந்துள்ளது. 48.88 கோடி ரூபாயாக இருந்த அ.தி.மு.க வருவாய், தற்போது 12.726 கோடியாக சுருங்கிவிட்டது. அ.தி.மு.க வருவாயில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் வங்கி வட்டி மூலமாகவே கிடைக்கிறது. பா.ம.க-வின் வருவாயில் 2.41 கோடி இழப்பு ஏற்பட்டு, தற்போது 1.17 கோடி ரூபாயாக உள்ளது. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரையில் 83 லட்ச ரூபாயாக இருந்த வருவாயை 87 லட்சமாக உயர்த்தியுள்ளனர். வருவாய் அதிகரிப்பில் மலைக்க வைத்திருப்பது ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சிதான். வெறும் 94 லட்சமாக இருந்த அந்தக் கட்சியின் வருவாய் 1,414.79 சதவிகிதம் அதிகரித்து 14.239 கோடி ரூபாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செலவினங்களைப் பொறுத்தவரை சமாஜ்வாடி, தி.மு.க, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. கட்சியை நிர்வகிக்கவும், பொதுச் செலவுகளுக்காகவும் 27.47 கோடி ரூபாயை தி.மு.க செலவழித்துள்ளது. அ.தி.மு.க-வின் செலவுகள் 55 சதவிகிதத்துக்கும் மேல் கட்சி நிவாரண நிதியாகத் தொண்டர்களுக்கு அளித்ததிலேயே கரைந்துள்ளது.

தன்னார்வ அமைப்பு ஆய்வுகளின் அடிப்படையில் 34 மாநிலக் கட்சிகளின் வருவாய் இருப்பு, கடந்த 2016-17-ம் ஆண்டைவிட 42 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 468.63 கோடியாக இருந்த வருவாய், ஒரே ஆண்டில் 172.78 கோடி ரூபாய் குறைந்து, 236.86 கோடி  ரூபாயாக மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளிடம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, சில ஆலோசனைகளையும் இந்த அமைப்பு வழங்கியுள்ளது. ``உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, வேட்பாளர்களின் வேட்புமனுவில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அதே வழிமுறையில், அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் படிவம் 24ஏ-வில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப வேண்டும். 20,000 ரூபாய்க்கு மேல் நிதி அளிப்பவர்களின் பெயர் விவரங்களை அரசியல் கட்சிகள் பதிவு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட தேதிக்குள் தங்களின் வருவாய் கணக்கை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையம் தயங்கக் கூடாது.  வருவாய் மற்றும் செலவு விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக மக்கள் அறிந்துகொள்ள அரசியல் கட்சிகள் வழிவகை செய்ய வேண்டும்’’ என ஆலோசனைகளை அந்த அமைப்பு வழங்கியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close