“அரசியல் பாரம்பர்யம் கொண்ட மண் விருதுநகர்!” - ஸ்டாலின் பெருமிதம்! | stalin started sentiment campaign in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (10/03/2019)

கடைசி தொடர்பு:12:31 (16/03/2019)

“அரசியல் பாரம்பர்யம் கொண்ட மண் விருதுநகர்!” - ஸ்டாலின் பெருமிதம்!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்காகத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல நாள், சென்டிமென்ட் பார்த்து விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

“அரசியல் பாரம்பர்யம் கொண்ட மண் விருதுநகர்!” - ஸ்டாலின் பெருமிதம்!

 

அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட உள்ள தொகுதி, வேட்பாளர்கள் தேர்வு எனத் தேர்தலுக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டை அ.தி.மு.க-தான் முதலில் தொடங்கியது. தி.மு.க தாமதமாகவே தொடங்கியது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு முன்பே தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்துள்ளது. தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்குச் சரிபாதியாக 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள தி.மு.க, மீதமுள்ள 20 தொகுதிகளில் தன் கட்சி வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளது.
 

ஸ்டாலின்

தேர்தலுக்குத் தயாராகியுள்ள தி.மு.க, தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. முதல் பிரசார பொதுக்கூட்டத்தை மார்ச் 6-ம் தேதி விருதுநகரில் தொடங்கியது. மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் நடந்த அதே நாளில் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இவ்வளவு தொண்டர்கள் வந்திருப்பதைக் கண்டு மிகவும் உற்சாகமடைந்தார் ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர்,  “2004-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு முன் விருதுநகரில் தி.மு.க மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்குப் பின் நடந்த மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்து, தி.மு.க ஆதரவோடு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. இப்போது வரலாறு திரும்புகிறது. இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெறும். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று நாம் சுட்டிக் காட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆட்சிக்கு வருவார். அந்த வெற்றிப் பயணத்தின் தொடக்கம்தான் இந்தக் கூட்டம்” எனத் தொண்டர்களைப் பார்த்துப் பேசினார்.
 

மாநாடு

மேலும் பேசிய அவர், ‘விருதுநகர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாவட்டம். பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் ஆகிய இரண்டு முதல்வர்களைத் தந்த மாவட்டம் இது. தமிழக அரசின் சின்னமான கோபுரம், இந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் உள்ளது. தமிழ்நாட்டுக்கு, ‘தமிழ்நாடு’ எனப் பெயர் வைக்கக் கோரி 78 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த சங்கரலிங்கனார் பிறந்த மாவட்டம் இது. அரசியல் பாரம்பர்யம் கொண்ட இந்த மண்ணில், அரசியல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என மாவட்டத்தின் பெருமைகளையெல்லாம் புகழ்ந்து பேசினார். மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ஸ்டாலின், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சித் தலைவர்களையும் விமர்சித்தார்.

கூட்டம்

2004-ம் ஆண்டு விருதுநகரில் மாநாடு நடந்ததால்தான் நம் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று மத்தியில் நம் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 2006-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தோம். ஆனால், 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் இடத்தைக்கூட நம்மால் பெற முடியவில்லை. விருதுநகர் நமக்கு ராசியான ஊர். இங்கே பிரசாரத்தைத் தொடங்கினால் நிச்சயம் நாம் வெல்லலாம். 21 சட்டமன்றத் தேர்தலுக்கான இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. அதிலும் வெற்றிபெற வேண்டும். விருதுநகரில் மாநாடு நடத்தினால் மத்தியிலும் மாநிலத்திலும் நம் கூட்டணி நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியினர் யோசித்துள்ளனர்.

மாநாடு

விருதுநகரிலேயே மாநாடு நடத்த முடிவெடுத்த அக்கட்சியினர் நல்ல நாள் பார்த்து அமாவாசை தினத்தில் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பகுத்தறிவு இயக்கமான தி.மு.க-வினர் ஆன்மிகத்தின் மேல் நாட்டம் கொண்டவர்களாக மாறிவரும் நிலையில், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்டிமென்ட் பார்த்து அமாவாசை தினத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close