``இன்னும் ஐந்தாண்டுகள் இந்த ஆட்சி நீடித்தால், அது நாடாளுமன்ற அமைப்பின் முடிவாக இருக்கும்" - பிரகாஷ் காரத் காட்டம் | CPM Meeting in kanniyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:22 (16/03/2019)

``இன்னும் ஐந்தாண்டுகள் இந்த ஆட்சி நீடித்தால், அது நாடாளுமன்ற அமைப்பின் முடிவாக இருக்கும்" - பிரகாஷ் காரத் காட்டம்

``பா.ஜ.க அரசு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி நடத்தினால் அது, நாடாளுமன்ற அமைப்பின் முடிவாக, மதச்சார்பின்மையின் முடிவாக இருக்கும்" என குமரி மாவட்டம் தக்கலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசினார்.

பிரகாஷ் காரத்


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், சி.பி.எம் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்துகொண்டு பேசுகையில், "எங்கள் கட்சி என்றுமே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையோ, பெரும் நிறுவனங்களின் நிதியை நம்பியோ இருந்ததில்லை. சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் நிதி வசூல் செய்கிறோம். அந்த நிதி மூலம் அன்றாட பணி மற்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்திவருகிறோம். இதுவரை நடந்த தேர்தல்களைவிட, இந்தத் தேர்தல்தான் மிக முக்கியமானது. இந்த நாடு, மதச்சார்பற்ற நாடாக நீடிக்கிறதா இல்லையா, நாடாளுமன்ற ஜனநாயகம் நீடிக்கிறதா இல்லையா, பல கலாசார மக்கள் ஒன்றிணைந்து அமைதியாக வாழ வழிசெய்கிறதா என இந்தத் தேர்தல் தீர்மானிக்க இருக்கிறது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்த்துவிட்டது. மதச்சார்பற்ற நாடு என்பதில் இருந்து மாற்றி, இந்து ராஷ்டிரம் ஆக்க முயல்கிறார்கள். சிறுபான்மை இன மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து மொழிகளையும்விட இந்திக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சமஸ்கிருதத்தை உன்னத மொழியாக்க முயல்கிறார்கள். பசு வதை என்ற பெயரில் 45-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். வட இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிசெய்யும் மாநிலங்களில் மிகக் கொடூரமாக மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டன. இது இந்து தேசம், இந்துக்கள் மட்டுமே பிரஜைகளாக முடியும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை இந்த அரசு செயல்படுத்துகிறது.

கன்னியாகுமரி மாவட்டம்

இந்த அரசு, வெளிப்படையாக கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கின்றன. அம்பானிகள், அதானிகள் எல்லாம் இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்க முயல்கிறார்கள். தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதற்காக, நிறுவனங்களைச் சிதைத்துவருகிறது இந்த அரசு.

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வளர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக,  பி.எஸ்.என்.எல் சீரழிக்கப்படுகிறது. வங்கி, விமானநிலையம், கனிமவளத்துறை ஆகியவற்றைப் பெரு முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டு, பெரும் முதலாளிகளை வாழவைக்கிறார்கள். ரபேல் ஊழலை வெளியே கொண்டுவந்ததற்காக இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் மீது மிரட்டல் விடுகிறார்கள். ஊழலை வெளியே கொண்டுவருபவர்களை மிரட்டும் செயலில் இந்த அரசு செயல்படுகிறது. விலைவாசி மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ ஆகியவை சீரழிக்கப்படுள்ளன.

பொதுக்கூட்டம்

பா.ஜ.க அரசு இன்னும் ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தினால், அது நாடாளுமன்ற அமைப்பின் முடிவாக, மதச்சார்பின்மையின் முடிவாக இருக்கும்.

இந்தத் தேர்தலில் நம்முடைய ஒரே லட்சியம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு முடிவுகட்டுவது மட்டுமே ஆகும். பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி கூட நாடாளுமன்றத்திற்கு வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நமக்கென தனி கொள்கைகள் உண்டு. நாங்கள் சேர்ந்திருக்கும் கட்சிகளுக்கும் பல வேறுபாடான கொள்கைகள் உள்ளன. வேறுபாடுகள் இருந்தாலும், ஒருமித்து நின்று பா.ஜ.க-வை முறியடிக்க முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தைப்பொறுத்தமட்டில், தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் பா.ஜ.க வெற்றிபெற்ற ஒரே தொகுதி, கன்னியாகுமரி தொகுதி. இந்தத் தொகுதியில் பா.ஜ.க-வை முறியடித்து, மதச்சார்பற்ற வேட்பாளரை வெற்றிபெறவைக்க வேண்டும்" என்றார்.


[X] Close

[X] Close