`ஜெயலலிதா பாணியில் தினகரன்; புதன்கிழமை வேட்பாளர் பட்டியல்’ - டாப் கியரில் அ.ம.மு.க! | ammk candidates list will be released on wednesday

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:24 (16/03/2019)

`ஜெயலலிதா பாணியில் தினகரன்; புதன்கிழமை வேட்பாளர் பட்டியல்’ - டாப் கியரில் அ.ம.மு.க!

ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியலை முதல் ஆளாக அறிவித்துவிட்டு, பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்க அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது. வரும் மார்ச் 13 -ம் தேதி புதன்கிழமையன்று, அ.ம.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன்

தமிழகத்தில் ஏப்ரல் 18 -ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க கூட்டணிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் ஆறு முனைகளாகத் தேர்தலை சந்திக்கின்றன. அ.ம.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 38 தொகுதிகளிலும் அ.ம.மு.க வேட்பாளர்களே களமிறங்க உள்ளனர். 

வேட்பாளர்கள் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்தவுடன், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால், காலை 10:30 மணிக்கு மேல் அ.ம.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட தினகரன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர், நாடாளுமன்றத் தேர்தலில் 'சீட்' கேட்டிருந்தனர். அவர்களில் ஒருசிலருக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்களை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டு, நாடாளுமன்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறதாம். 

தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப் பிரசாரத்தை மக்கள் சந்திப்பு பயணம் மூலமாகத் தினகரன் ஏற்கெனவே முடித்துவிட்டார். முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, அடுத்தகட்ட பயணத்துக்கு தினகரன் புலிப் பாய்ச்சல் காட்டப்போவதாக அ.ம.மு.க-வினர் குதூகலிக்கிறார்கள்.


 


[X] Close

[X] Close