``காவியும் ஆவியும் இணைந்த கொள்கையற்ற கூட்டணி!” - கி.வீரமணி காட்டம் | "The AIADMK is a non-policy coalition” -K.Veramani

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:24 (16/03/2019)

``காவியும் ஆவியும் இணைந்த கொள்கையற்ற கூட்டணி!” - கி.வீரமணி காட்டம்

‘‘சமூக நீதிக்கு எதிராக இருக்கும் காவியும் ஆவியும் இணைந்து, கொள்கையற்ற கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ரஜினியும் கமலும் பா.ஜ.க-வின் ‘பி’ டீம்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

வேலூரில், திராவிடர் கழகம் சார்பில் ஈ.வெ.ரா.மணியம்மையாரின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு 10 -ம் தேதி மாலை நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘மோடி வித்தை காட்டுகிறார். தமிழக அமைச்சரவையில் மோடிக்கு ஜால்ரா தட்டும் கொத்தடிமைகள் உள்ளனர். லேடி இருந்த இடத்தில் மோடியை டாடி என்கிறார்கள். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் காவியும் ஆவியும் இணைந்து, கொள்கையற்ற கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். ஓட்டுகளைப் பிரிப்பதற்காக வசனம் பேசும்... ஒப்பனை பாடும்... நாதஸ்வரம் வாசிக்கும், பா.ஜ.க-வின் ‘பி’ டீம் இருக்கிறார்கள். எங்களை அவர்கள் ஏமாற்றமுடியாது’’ என்று கடுமையாகச் சாடினார். 

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும்தான் பா.ஜ.க-வின் ‘பி’ டீம் என்று கி.வீரமணி விமர்சனம் செய்ததாக, திராவிடர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக, ‘சாதி-மதம் அற்றவர்’ என வருவாய்த் துறை சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ம.ஆ.சிநேகாவைப் பாராட்டி கௌரவித்தார். இந்த மாநாட்டில், திராவிடர் கழகம், தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close