கோடீஸ்வரர் முதல் ஏழைகள் வரை ஊர் மந்தையில்தான் திருமணம்! ஆச்சர்ய கிராமம் | Marriage in the traditional way

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (11/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (11/03/2019)

கோடீஸ்வரர் முதல் ஏழைகள் வரை ஊர் மந்தையில்தான் திருமணம்! ஆச்சர்ய கிராமம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி. இங்கு, ஒரு சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இந்த டிஜிட்டல் யுகத்திலும் பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமண மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிலையில், கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், ஊர் மந்தையில்தான் திருமணம் நடத்துகிறார்கள். உறவுகள் ஒன்றுகூடி, பாரம்பர்ய சடங்குகள் நடத்தி, சிறப்பாகத் திருமணம் நடத்துகிறார்கள்.

பாரம்பர்ய திருமணம்

நேற்று, இந்த ஊரில் ஒரு திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தைச் சேர்ந்த பொம்முகாளை, ஜெயக்கொடி தம்பதியின் மகன் ராமகிருஷ்ணனுக்கும், பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமு, விஜயராணி மகள் பவித்ராவுக்கும் திருமணம் நடந்தது. தற்போது பேருந்து நிறுத்தமாக இருக்கும் ஊர் மந்தையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. ஊருக்கு வெளியே உள்ள பெருமாள் மலையில் இருந்து பாலை மரத்தின் குச்சிகள் மற்றும் கிளைகளை வெட்டி எடுத்துவந்தார்கள்.

குதிரையில் வந்த மணமகன் 

அந்தக் குச்சிகளை வைத்து மணப்பெண்ணுக்கு குடிசை அமைக்கப்பட்டது. மணமகளை அழைத்துவந்து குடிசையில் அமர வைத்தார்கள். குடிசைக்கு அருகே, மணமகன் அமர்வதற்குச் சாக்கு விரிப்பு விரிக்கப்பட்டது. மணமகன் வந்து விரிப்பில் அமர்ந்துகொண்டார். திருமணத்தை நடத்திவைக்கும் கம்பளி நாயக்கர், பாரம்பர்ய முறைப்படி திருமணச் சடங்குகளை நடத்தினார். மணமகனைத் தயாராக இருந்த பஞ்சகல்யாணி குதிரையில் அமரவைத்து, ஊர் மந்தையை வலம் வர வைத்தார்கள். கடைசியில், குதிரையிலிருந்து கீழே இறங்க விடாமல் தாய்மாமன் மணமகனைத் தூக்கிக்கொண்டுபோய் மணமகளிடம் ஒப்படைத்தார். பாரம்பர்ய வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்க, மணமகன், மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினார்.

பாரம்பரிய திருமணம் 

இரு வீட்டுப் பெண்களும் தங்கள் உறவுகள் வலுப்படும் வகையில் சீர்கள் கொடுத்தார்கள். போட்டிபோட்டு நடனங்கள் ஆடினர். மகிழ்ச்சியில் இருந்தது ஊர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாரம்பர்ய தேவராட்டம் ஆடி, மணமக்களை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மணமக்கள் இருவரும் பட்டதாரிகளாக இருந்தாலும், பாரம்பர்ய முறைப்படி திருமணம் செய்துகொண்டது தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகச் கூறினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close