`நீங்க உடனடியா இந்தியாவை விட்டு வெளியேறணும்!'- பிரான்ஸ் அரசியல் விமர்சகரைத் தடுத்த போலீஸ் | pazha.nedumaran against the action of home ministry

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (11/03/2019)

கடைசி தொடர்பு:11:45 (11/03/2019)

`நீங்க உடனடியா இந்தியாவை விட்டு வெளியேறணும்!'- பிரான்ஸ் அரசியல் விமர்சகரைத் தடுத்த போலீஸ்

''தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியும் அரசியல் விமர்சகருமான அந்தோணி ருசேல், உடனடியாக 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதோடு, இந்தியாவுக்கு வரும் பிறநாட்டு மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வது மனிதநேயமற்றது'' என பழ.நெடுமாறன் தெரிவித்தார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதியும், அரசியல் விமர்சகருமான அந்தோணி ருசேல், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு ஆறு மாத கால சுற்றுலா விசாவில் வந்தார். தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட  பல இடங்களுக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில், ஈழப்போரில் நடந்த கொடுமைகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு ,மதிய உணவுக்காக வெளியே செல்ல இருந்த அந்தோணி ருசேலை போலீஸார் மறித்ததோடு, `நீங்க உடனடியாக 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்' எனக் கூறினர்.

இதற்கு, முறையான எந்தக் காரணத்தையும் கூறாமல், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட உத்தரவு இது. அயல்நாட்டு வருகைப் பதிவு அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருமான மகேஸ்வரன் உத்தரவின்படி அந்தோணி ருசேலை வெளியேற கேட்டுக்கொண்டனர் போலீஸார். இதையடுத்து அந்தோணி ருசேல், கார் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தூதகரத்தில் முறையிட புறப்பட்டுச் சென்றார்.

பழ நெடுமாறன்

இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், `முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருந்தது. இந்தியாவுக்கு வந்த அந்தோணி ருசேலை நாங்கள் பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைத்தோம்.நேற்று மாலை நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில், அவரை போலீஸார் எந்தக் காரணமும் கூறாமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு என்று மட்டும் கூறி, 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது மனிதநேயமற்ற செயலாகும். இது, வேண்டாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் இதுபோன்ற செயல்களால் குறையும்'' என்றார்.
 


[X] Close

[X] Close