லட்ச ரூபாய் பைக்கைத் திருடுவதுதான் இலக்கு - சிக்கிய கல்லூரி மாணவர், சிறுவர்கள்   | Bike theft case on young boys in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:52 (11/03/2019)

லட்ச ரூபாய் பைக்கைத் திருடுவதுதான் இலக்கு - சிக்கிய கல்லூரி மாணவர், சிறுவர்கள்  

கல்லூரி மாணவர் திருடிய பைக்குகள்

சென்னையில், ஒரு பைக்கில் சென்ற சிறுவர்கள், இன்னொரு பைக்கை காலால் மிதித்தபடி ஓட்டிச்சென்றனர். அவர்கள் சென்ற பைக், போலீஸ் வாகனத்தின்மீது மோதியதும், பைக்கில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில், கல்லூரி மாணவர் ஒருவரைப் பிடித்து விசாரித்தபோதுதான், பைக் திருடும் கும்பல் எனத் தெரியவந்துள்ளது. 

சென்னை சாஸ்திரி நகர் முதலாவது மெயின் ரோடு, முதலாவது சந்து பகுதியில் உதவி ஆய்வாளர் சகாப் மற்றும் தலைமைக் காவலர்கள் ரமேஷ், சரவணன், ராஜராஜசோழன் ஆகியோர் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டோ பண்ணியபடி 2 பைக்கில் வந்தவர்கள் போலீஸ் வாகனத்தில்மீது மோதினர். இதனால், அவர்களை போலீஸார் பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் போலீஸாரிடம் பைக்கோடு சிக்கிக்கொண்டார். மற்றவர்கள், இன்னொரு பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். சிக்கியவரிடம் விசாரித்தபோது, சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜூ (19) என்பது தெரியவந்தது. ராஜூ கொடுத்த தகவலின்பேரில், இரண்டு சிறுவர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  

கல்லூரி மாணவர் திருடிய பைக்குகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் விலை உயர்ந்த பைக்குகள் திருடப்படுவதாக காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தன. அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து சென்றபோதுதான், வண்டியை ஓட்டிவந்தவர்கள் காவல் வாகனத்தின்மீது மோதினர். சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரித்தபோதுதான், அவர்கள் பைக் திருடும் கும்பல் எனத் தெரியவந்தது. அதில், ராஜூவைத் தவிர மற்றவர்கள் சிறுவர்கள். விசாரணைக்குப் பிறகு ராஜூவை சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் அடைத்துள்ளோம். இரண்டு சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளோம். 

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சத்துக்கு மேல் விலை உள்ள பைக்குகளை மட்டுமே குறிவைத்துத் திருடுவார்கள். முதலில் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் நிறுத்தப்படும் பைக்குகளை நோட்டமிட்டு, அதன்பிறகே அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருடிய பைக்கில் ஒன்றை திருவண்ணாமலையில் விற்றுள்ளனர். அந்த பைக்கை பறிமுதல்செய்துள்ளோம். இன்னும் இரண்டு பைக்குகள் கோவளம், கேளம்பாக்கத்தில் வைத்துள்ளனர்.  இவர்களிடமிருந்து 6 விலை உயர்ந்த பைக்குகளைப் பறிமுதல்செய்துள்ளோம். அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்துவருகிறோம்" என்றனர். 

கல்லூரி மாணவர் திருடிய பைக்குகள்


பைக் திருடர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், விலை உயர்ந்த பைக்குகள் மட்டும்தான் எங்களுடைய இலக்கு. அந்த பைக்குகளின் அருகில் நாங்கள் செல்லும் பைக்கை நிறுத்துவோம். ஒருவர் நோட்டமிடுவார், இன்னொருவர் பைக்கின் லாக்கை உடைப்பார். எந்த லாக் என்றாலும் அரைமணி நேரத்தில் உடைத்துவிடுவோம். அதன்பிறகு, நாங்கள் திருட்டு பைக்கோடு எஸ்கேப் ஆகிவிடுவோம். பைக் திருடியதும், ஜாலியாக புதுச்சேரிக்குச் செல்வோம். கையிலிருக்கும் பணம் செலவாகும்வரை அங்கேயே இருப்போம். நாங்கள் விரும்பிய வாழ்க்கையை அங்கு வாழ்ந்தோம். பணம் காலியானதும் மீண்டும் சென்னைக்கு வந்து, விலை உயர்ந்த பைக்குகளைத் திருடுவோம் என்று கூறியுள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``எங்களிடம் சிக்கிய ராஜூ, சோளிங்கநல்லூரில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். அவரின் நண்பர்கள்தான் 2 சிறுவர்களும். அவர்கள் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். அதன்பிறகு பைக் திருடும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திருடிய பைக்குகளை எப்படி விற்பார்கள் என்று விசாரித்தபோது, முதலில் எந்தவித தகவலையும் சொல்லவில்லை. அதன்பிறகு, எங்கள் பாணியில் அவர்களை விசாரித்தபோதுதான், திருவண்ணாமலையில் லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தகவலைத் தெரிவித்தனர். உடனடியாக திருவண்ணாமலைக்குச் சென்றோம். ராஜூ கொடுத்த முகவரியில் அந்த திருட்டு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அவரிடம் தகவலைச் சொல்லி பைக்கை மீட்டோம். அப்போது, பைக்கை வாங்கிய நபரோ... அது திருட்டு பைக் என்று தெரியாது. காலேஜிக்கு ஃபீஸ் கட்ட வேண்டும் என்றுகூறிதான் பைக்கை விற்றதாகக் கூறியுள்ளார். இதுவரை விலை உயர்ந்த 6 பைக்குகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இன்னும் இரண்டு பைக்குகள் சென்னையில் உள்ளன. அதையும் விரைவில் பறிமுதல் செய்வோம். கல்லூரி மாணவர் ராஜூ பைக் திருடனான சம்பவம் தனிக்கதை" என்றார். 
 


[X] Close

[X] Close