`யார் பிடியில் குருவின் குடும்பம் உள்ளதென்று எனக்குத் தெரியும்'- பா.ம.க வைத்தி வெளியிட்ட அதிர்ச்சி | Pmk statement regarding guru's family

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:55 (11/03/2019)

`யார் பிடியில் குருவின் குடும்பம் உள்ளதென்று எனக்குத் தெரியும்'- பா.ம.க வைத்தி வெளியிட்ட அதிர்ச்சி

``காடுவெட்டி குருவின் குடும்பம் சமூக விரோத, கொலைகார, துரோகக் கும்பலின் கையில் உள்ளது. அவர்கள் எண்ணம் ஒருபோதும் பலிக்காது" என்று பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் வைத்தி கடுமையாக எச்சரித்துள்ளார்.

குரு பழைய படம்

`அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்கு காடுவெட்டி குரு தடையாக இருப்பார் என எண்ணி, அவரைக் கொலை செய்துவிட்டனர்' என குருவின் குடும்பத்தினர் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தனர்.

குருவின் குடும்பம்

குரு குடும்பத்தினரின் இந்தக் குற்றச்சாட்டுகுறித்து பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் வைத்தியிடம் பேசினேன். "குரு அண்ணணோடு இருந்தவன் நான். ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்ற சந்தேகம் வெகு நாள்களாக எழுந்தது. தற்போது உறுதியாகிவிட்டது. குரு எப்படி வாழ்ந்தாரோ அதற்கு எதிர்மாறாகத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் நடந்துகொண்டு, அவரது புகழுக்குக் களங்கம் விளைவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. குருவைக் கொலைசெய்வதற்கு முயற்சி செய்த சமூக விரோத கொலைகாரக் கும்பலிடம் சேர்ந்துகொண்டு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டுவருகிறார்கள். இது, அவர்கள் அளித்த பேட்டியின் மூலம் தெளிவாகப் புரிகிறது. குரு இச்சமூகத்திற்காக 35 ஆண்டுக்காலம் பாடுபட்டு, தன் இறுதி மூச்சு வரை ராமதாஸின் சொல்லே வேதவாக்காக எண்ணி வாழ்ந்தவர். ஆனால். அவர் குடும்பத்தினர் சமூக விரோத கொலைகாரக் கும்பலிடம் கைகோர்த்துக்கொண்டு இவ்வாறு நடந்துகொள்வது பெரும் மன வருத்தத்தைத் தருகிறது.

குரு படத்தை வணங்கும் பாமகவினர்

குருவைக் கொலைசெய்தது ராமதாஸும், அன்புமணியும்தான் என அவதூறாகப் பேட்டி அளித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்து எப்படி சகித்துக்கொண்டு செல்லமுடியும். குருவுக்கு தொடர் கொலை முயற்சி ஏற்பட்ட காலத்திலெல்லாம் ராமதாஸும் அன்புமணியும் உயர் பதவியிலிருந்த காவல் துறையினரிடத்திலும், என் போன்று உடனிருப்பவர்களிடமும் நேரடியாகத் தொடர்புகொண்டு, குருவின் பாதுகாப்பை தினம்தினம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இவ்வாறு பேசுவது வேதனையாக உள்ளது.

பாமக வைத்தி

இவ்வாறு இவர்கள் நடப்பார்கள் என்று அன்றே குருவுக்குத் தெரிந்ததோ என்னவோ, மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரிடம் கூறிய கடைசி வார்த்தை "ராமதாஸ் சொல்வதைக் கேளுங்கள்" என்பதுதான். அப்போது நானும் உடனிருந்தேன். இது, அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனதார தெரியும். இறுதியாகச் சொல்கிறேன், இவ்வாறாக இவர்கள் நடந்து கொள்வதை குருவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது. இந்தச் சமூக விரோத, கொலைகார, துரோகக் கும்பலின் எண்ணமும் பலிக்காது" என்று முடித்துக்கொண்டார்.


[X] Close

[X] Close