``இன்று அல்லது நாளை இரவுக்குள் தொகுதிப் பட்டியல்!” - ஸ்டாலின் அறிவிப்பு | DMK president Mk stalin speak about parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (11/03/2019)

கடைசி தொடர்பு:12:58 (16/03/2019)

``இன்று அல்லது நாளை இரவுக்குள் தொகுதிப் பட்டியல்!” - ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒரு புறம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுடன் அ.தி.மு.க நேர்காணல் நடத்திவருகிறது. இன்னோரு புறம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துவருகிறது.

ஸ்டாலின்

மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள இந்தத் தேர்தலில், ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, எதுவாக இருந்தாலும் தி.மு.க தன்னுடைய பிரசாரத்தை மிக வலுவாகத் தொடங்கிவிட்டது. 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபையின்மூலம் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  2005 -ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் 40-க்கு 40 என்ற வெற்றியைப் பெற்றோம். அதே வெற்றியை வரும் தேர்தலில் நிச்சயம் பெறுவோம்.  

நியாயமாகப் பார்த்தால், தமிழகத்தில் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. ஆனால், மூன்று தொகுதிகளைத் தவிர்த்து, 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தினால் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை என தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக் கூடாது என்பது மரபு இல்லை. தடை உத்தரவு இல்லாத நிலையில், மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நிறுத்திவைக்கவேண்டிய அவசியம் இல்லை. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது. இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, கடந்த 15 மாதங்களாக 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவிடாமல் சதிசெய்துவருகிறது. அதேபோல, திருவாரூர் தொகுதியில் எந்த விதிமுறையும் இல்லாமல் தேர்தல் அறிவித்து, பின்பு நிறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது.

எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தேர்தல் ஆணையர் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இன்றோ அல்லது நாளையோ அவர்களுக்கு நேரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, எங்கள் உறுப்பினர்கள் மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தேவைப்பட்டால், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். 

காங்கிரஸ் மற்றும் வி.சி.க ஆகிய கட்சிகளைத் தவிர, பிற கட்சிகளுடன் பேசி யாருக்கு எந்தத் தொகுதி என முன்னதாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. இருந்தும் மரபுகளின் படி அனைத்துக் கட்சிகளும் தங்களின் கருத்தை தெரிவித்த பின்னர், அனைத்துக் கட்சிகளின் தொகுதிகளையும் சேர்த்து கூறப்படும். இன்று இரவோ அல்லது நாளையோ அது தொடர்பாக அறிவிக்கப்படும். இன்னும் 2 நாள்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 

நேற்று தேர்தல் தேதி அறிவிக்கும்போதே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வானிலை, மாணவர்களுக்கான தேர்வு மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே தேதிகள் அறிவிக்கப்பட்டதாகத் தெளிவாகக் கூறினார்கள். இருந்தும், மதுரை சித்திரைத் திருவிழாவை மட்டும் ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்படும்.18 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிடும். இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுவிட்டது’ எனப் பேசினார். 


[X] Close

[X] Close