நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court issues a Notice on Central Govt in Neutrino case

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (11/03/2019)

கடைசி தொடர்பு:14:50 (11/03/2019)

நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

நியூட்ரினோ

தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டப் பணிகளுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்த அனுமதிக்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் மேல்முறையீடு செய்த வழக்கில் நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். தமிழக அரசு பதில் தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கின் முடிவில் தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டப் பணிகளைத் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்றும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல்துறை கொடுத்த அனுமதியைத் திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் பூவுலகின் நண்பர்கள். இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசும் இதற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், இத்திட்டத்தில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும் வாதம் முன் வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் மத்திய அரசு நிறைவேற்றுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். 
 


[X] Close

[X] Close