விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கல்லூரி மாணவன்!  | Chennai College Student who Theft Costly Bikes

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (11/03/2019)

கடைசி தொடர்பு:14:51 (11/03/2019)

விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கல்லூரி மாணவன்! 

கல்லூரி மாணவன் திருடிய பைக்குகள்

 `கல்லூரிக்கு தினம் தினம் புதுப்புது பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் முதலில் விலை உயர்ந்த பைக்குகளைத் திருட ஆரம்பித்தேன்' என்று கல்லூரி மாணவன் ராஜூ பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் போலீஸார் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீது டோ பண்ணியபடி இரண்டு பைக்குளில் வந்தவர்கள் மோதினர். அவர்களிடம் விசாரித்தபோது பைக்கில் வந்தவர்கள் பைக் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 6 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜூ மற்றும் இரண்டு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர். 

 கல்லூரி மாணவர் ராஜூ போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ``நான் சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறேன். கல்லூரிக்கு தினம் தினம் புதுப்புது பைக்குகளில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வசதியில்லை. இதனால்தான் எங்கள் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் விலை உயர்ந்த பைக்குகள் நிறுத்துமிடங்களுக்குச் சென்றேன். அந்த பைக்குகளை இரண்டு நாள்கள் நோட்டமிடுவோம். பிறகு பைக் நிறுத்தும் இட நேரத்தின் அடிப்படையில் கைவரிசை காட்டுவோம். 

பைக்கை திருடிக் கொண்டு எங்கள் பகுதிக்கு கொண்டு செல்வோம். சில நாள்கள் அந்த பைக்கை வெளியில் எடுக்க மாட்டோம். பைக்கின் உரிமையாளரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்போம். பெரும்பாலும் விலை உயர்ந்த பைக்குகளை வைத்திருப்பவர்கள், பெயருக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அடுத்த சில நாள்களில் புதிய பைக்குகளை வாங்கிவிடுவர். 

 கல்லூரி மாணவன் திருடிய பைக்குகள்

திருடிய பைக்குகளில் சில மாற்றங்களைச் செய்வோம். பைக்கில் வாகனத்தின் ஆவணங்களின் நகலை வைத்துக்கொண்டு ஜாலியாக பைக்கில் கல்லூரிக்குச் செல்வேன். தினமும் புதுப்புது பைக்கில் பந்தாவாக கல்லூரிக்குச் சென்றதால் எனக்கு நண்பர்கள் அதிகமாகினர். கல்லூரியில் என்னை வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று பலரும் கருதினர். 

எனக்கு பைக் ரேஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை ரொம்பநாளாக இருந்தது. இதனால் ரேஸ் பைக்குகளை குறி வைத்து திருடினேன். அந்த பைக்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரேஸில் ஈடுபடுவேன். கடந்த மாதம் திருட்டு பைக்கில் ரேஸில் ஈடுபட்டேன். அப்போது நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றுவிட்டது. இந்தச் சமயத்தில் அங்கு வந்த நீலாங்கரை போலீஸார் என்னை மடக்கினர். அவர்களிடம் கல்லூரி மாணவன் என்று கூறி பைக்கில் ஆவணங்கள் வீட்டிலிருப்பதாகக் கூறி தப்பினேன். என்னிடமிருந்த பைக்கை போலீஸார் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு நான் காவல்நிலையத்துக்குச் செல்லவில்லை. 

பைக் ரேஸில் ஈடுபடும்போது வேகமாகச் சென்றபடி செல்ஃபி எடுப்பதுதான் என்னுடைய ஆசை. அப்படிச் சில செல்ஃபிக்களை எடுத்துள்ளேன். என்னுடன் சேர்ந்து பைக்குகளைத் திருடும் சிறுவர்களுக்குப் பணம் கொடுப்பேன். ஒரு பைக்கைத் திருடினால் புதுச்சேரிக்குச் சென்று நாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வோம். சம்பவத்தன்றுகூட ஒரு பைக்கை திருடிக்கொண்டு வரும்போதுதான் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். 

கல்லூரி மாணவன் திருடிய பைக்குகள்

கல்லூரி மாணவன் ராஜூ, பைக் திருடன் என்ற தகவல் கல்லூரி நிர்வாகத்துக்கு போலீஸார் தெரியப்படுத்தினர். மேலும், கல்லூரியிலும் இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரவியது. பைக் திருட்டு வழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்ளதால் இந்த வழக்கை போலீஸார் ரகசியமாகவும் கவனமாகவும் கையாண்டுவருகின்றனர். அதாவது திருவண்ணாமலையில் திருட்டு பைக்கை வாங்கிய நபரிடம் போலீஸார் கிடுக்குப்பிடி கேள்வி கேட்டுள்ளனர். அவரோ, `விலை குறைவு என்பதால் ஆசைப்பட்டு திருட்டு பைக்கை வாங்கிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கண்ணீர்மல்க போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். ராஜூவின் விபரீத ஆசை, அவரை வில்லங்கத்தில் சிக்கிவைத்தது மட்டுமல்லாமல், ராஜூவின் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது. ராஜூ இதுவரை திருடிய பைக்குகளை எங்கு வைத்துள்ளார் என்பதை சாஸ்திரிநகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close