பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடக்கிறது? - முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்றும் போலீஸ் #ArrestPollachiRapists | Are police officers trying to protect pollachi sexual abusers

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (11/03/2019)

கடைசி தொடர்பு:17:47 (11/03/2019)

பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடக்கிறது? - முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்றும் போலீஸ் #ArrestPollachiRapists

பொள்ளாச்சியில் வக்கிரக்கும்பலால், ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம், பெரிதாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ஆனால், விவகாரத்தை மூடி மறைப்பதிலேயே காவல்துறை கவனமாய் இருப்பது, தெள்ளத்தெளிவாகி வருகிறது.

குற்றாவாளிகள்

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓர் இளம்பெண், பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பி, காவல்துறையில் புகார் கொடுக்க, சம்பந்தப்பட்ட சில இளைஞர்களைக் கைது செய்து விசாரித்தது போலீஸ். அவர்களிடமிருந்த வீடியோக்களை வாங்கிப்பார்த்தபோது, அதிர்ந்து போனார்கள் பொள்ளாச்சி போலீஸார். கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களிடம், 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அதில், ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகள், கல்லுாரி மாணவியர், இளம் இல்லத்தரசிகள் என பலரையும் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்த காட்சிகள் இருந்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண்களிடம் இதைக் காண்பித்து மிரட்டி, பணம் பறித்துள்ளனர். 

பாலியல் வன்கொடுமை


இந்தக் கும்பலில் ஏராளமான இளைஞர்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை, நான்கு பேரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். ஆளும்கட்சியினர் தொடர்பு இருப்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க போலீஸார் முயற்சி செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். #ArrestPollachiRapists என்கிற ஹேஷ்டேகில் இணையம் முழுக்க இதற்கு கண்டன் குரல்கள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, சில ஊடகங்களில் வெளியான காணொலிக் காட்சிகளும், காட்டுத்தீயாகப் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று வரையிலும் ஐ.ஜி., மற்றும் எஸ்.பி யாருமே, பொள்ளாச்சிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தவே இல்லை. வெறும் அரை மணி நேரப் பயணத்தில் கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்துவிட முடியுமென்ற நிலையில், இதுவரை ஐ.பி.எஸ் அதிகாரிகள் யாரும் வந்து விசாரணை நடத்தாமல் இருப்பதே, இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்குப் போலீஸார் எவ்வளவு தீவிரம் காட்டுகின்றனர் என்பதை உணர்த்துவதாகவுள்ளது.


தேர்தல் நேரம் என்பதால், இந்த விவகாரத்தால் ஆளும்கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்குக் கடும்பாதிப்பு ஏற்படுமென்று கருதப்படுவதே, இவர்கள் பின் வாங்குவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி, நீதிமன்றத்தை அணுகவும் முயற்சி நடந்து வருகிறது. இந்த வக்கிரக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், புகார் கொடுக்க முன்வந்தால் விவகாரம் பெரிதாக வெடித்துக் கிளம்புவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், ஆளும்கட்சித்தொடர்பும், காவல்துறையின் மெத்தனமும் மற்றவர்களை வெளியில் வரவிடாமல் தடுப்பதாக மக்கள் குமுறுகின்றனர். நீதித்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.நேற்று இந்த நான்கு இளைஞர்களும் மீண்டும் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை, மீண்டும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close