படித்தது பத்தாம் கிளாஸ்தான்; மோசடி செய்வதில் பிஹெச்டி!- போலீஸின் ராஜதந்திரத்தால் சிக்கிய கோடீஸ்வரன் | Chennai call centre Fraud Gobi Krishnan arrested by police

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (11/03/2019)

கடைசி தொடர்பு:18:47 (11/03/2019)

படித்தது பத்தாம் கிளாஸ்தான்; மோசடி செய்வதில் பிஹெச்டி!- போலீஸின் ராஜதந்திரத்தால் சிக்கிய கோடீஸ்வரன்

மோசடி

சென்னையில் கால் சென்டரை நடத்தி பல கோடி ரூபாயை மோசடி செய்த கோபி கிருஷ்ணன் என்ற கோடீஸ்வரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ராஜதந்திரத்தால் பிடித்துள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கம், வடபழனி, தேனாம்பேட்டை என 10 இடங்களில் கால்சென்டர்கள் செயல்பட்டன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், லோன் வேண்டுமா என போன் செய்து அப்பாவிகளை ஏமாற்றிவந்தனர். பணத்தை இழந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார், கால்சென்டரில் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ஆனால், கால்சென்டரை நடத்தி மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபி என்கிற கோபி கிருஷ்ணனை போலீஸார் தேடிவந்தனர். 

 மோசடி

போலீஸார் தேடுவதையறிந்த அவர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் அவரை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் கோபி கிருஷ்ணனை, தங்களுடைய ராஜதந்திரத்தால் பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். மோசடி வழக்கு குறித்து இரவு, பகல் பாராமல் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். அப்போது இந்த மோசடியில் கோபி கிருஷ்ணனின் அம்மா மீனாட்சி, அப்பா வாசு என்கிற விஜயகிருஷ்ணன் மற்றும் தங்கை நளினி, அலுவலக உதவியாளர் மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மோசடி பணம் வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தலைமறைவாக இருந்தனர். நீண்ட நெடிய தேடுதலுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

 குடும்பத்தினரை போலீஸார் கைது செய்த தகவல் வெளிநாட்டிலிருந்த கோபி கிருஷ்ணனுக்குத் தெரியவந்தது. இதனால் அவர் மனமாறினார். உடனடியாக வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அதற்கு முன்பே போலீஸார் சென்னை விமான நிலையத்தில் தகவல் தெரிவித்திருந்தனர். கோபி கிருஷ்ணன் விமான நிலையத்துக்கு வந்ததும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விமான நிலையம் சென்று கோபி கிருஷ்ணனைக் கைது செய்து,  அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார். 

 கோபிகிருஷ்ணனின் குடும்பம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் கால்சென்டரை நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஆனால், மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட கோபி கிருஷ்ணனைத் தேடிவந்தோம். கோபி கிருஷ்ணனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வந்த தம்பதியான உமாபதி, சீதா மற்றும் சதீஷை கைது செய்தோம். மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்தோம். அவர்களில் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின.  அதன்பிறகு கோபி கிருஷ்ணனுக்குப் பலவகையில் செக் வைத்தோம். அவருக்கு எங்கிருந்து பணம் அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதையும் தடை செய்தோம். அடுத்த அதிர்ச்சியாக தலைமறைவாக இருந்த அவரின் அம்மா, அப்பா, தங்கையைக் கைது செய்தோம். இதனால் வேறுவழியின்றி கோபிகிருஷ்ணன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தார். அவரையும் கைது செய்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கோபி கிருஷ்ணன், சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். கோபி கிருஷ்ணன், பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். ஆரம்பத்தில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். இன்சூரன்ஸ் தொழிலில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்த அவர், அதை வைத்தே பொதுமக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார். இன்சூரன்ஸ் என்ற பெயரில் அலுவலகத்தை நடத்திய அவர், அங்கு வரும் பொதுமக்களை மூளைச்சலவை செய்து பணத்தை ஏமாற்றியுள்ளார். அதாவது, 1 லட்சம் ரூபாய்க்கு இன்ஸ்சூரன்ஸ் செய்தால் நீங்கள் கேட்கும் தொகையை லோனாக வாங்கித் தருகிறேன். அதுவும் குறைந்த வட்டி எனச் சொல்லிதான் மோசடி வேலையில் கோபி கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜாலியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துள்ளார். 

 கோபி கிருஷ்ணன்

அப்போதுதான் கால் சென்டர் பிசினஸ் பற்றி அறிந்த கோபி கிருஷ்ணன் அதைக்கொண்டு மோசடி செய்ய திட்டமிட்டார். கால்சென்டருக்காக சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் அலுவலகங்களை வாடகைக்கு எடுத்தார். அதில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார். கோபி கிருஷ்ணனின் கால்சென்டரில் வேலை பார்க்கும் பலருக்கு இது ஒரு மோசடி கால் சென்டர் என்று தெரியாது. அந்தளவுக்கு கால் சென்டரின் மோசடி விவகாரங்களை ரகசியமாக வைத்திருந்தார் கோபி கிருஷ்ணன். அவரின் மோசடிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு மட்டும் இன்சென்டிவ் என்ற பெயரில் பணத்தை அள்ளிக்கொடுத்தார். கால்சென்டர் மோசடி மூலம் கோடிகளில் புரண்டார் கோபி கிருஷ்ணன். 1,000 ரூபாய் தொடங்கி லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றிய கோபி கிருஷணன், குறுகிய காலத்தில் கோடீஸ்வரரானார். 

அதன்பிறகு அவரின் வாழ்க்கை ஸ்டைலே மாறியது. சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்களை வாங்கி விற்கும் தொழிலில் கால்பதித்தார். அதிலும் கோபி கிருஷ்ணனுக்கு வருமானம் வந்தது. இதனால், செல்வந்தவர்கள் விளையாடும் சூதாட்டத்தில் பணத்தை கோபி கிருஷ்ணன் இழந்தார். சில நேரங்களில் அதில் ஜெயித்தும் உள்ளார். இப்படிப் போன அவரின் ஆடம்பர வாழ்க்கையில் கால்சென்டரில் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரால் சிக்கியுள்ளார். கோபி கிருஷ்ணனிடமிருந்து 13 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளோம். மோசடி செய்வதில் அவர் பிஹெச்டி. அவரின் மூளையை நல்ல வழியில் பயன்படுத்தியிருந்தால் இன்று கோபி கிருஷ்ணன் தமிழக கோடீஸ்வரர்களின் டாப் 10 பட்டியலில் கண்டிப்பாக இடம்பிடித்திருப்பார்" என்றார். 

போலீஸாரிடம் கோபி கிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்திலும் எப்படியெல்லாம் மோசடி செய்தேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கால் சென்டர்களை நடத்திய சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கோபிகிருஷ்ணன், அந்தப் பணத்தில் அசையும், அசையாத சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 


[X] Close

[X] Close