பொள்ளாச்சி பாலியல் வன்முறை வீடியோ வழக்கில் சிக்கப்போகும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் யார், யார்? | police Investigation on Pollachi sexual assault case

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (11/03/2019)

கடைசி தொடர்பு:19:35 (13/03/2019)

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வீடியோ வழக்கில் சிக்கப்போகும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் யார், யார்?

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள்

பொள்ளாச்சி மாணவிகள், இளம் பெண்கள் வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய ஆளுங்கட்சியினர் யார், யார் என்பதற்காக ஆதாரங்களை தேர்தலுக்கு முன் வெளியிட ஒரு தரப்பினர் தயராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சி மாணவிகள், பெண்களின் ஆபாச வீடியோ விவகாரத்தில் அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசியமாக இருந்த ஆபாச வீடியோக்கள் பலரின் செல்போன்களில் பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் பெண்களும் வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வீடியோக்கள் எப்படி வெளியானது என்று போலீஸார் விசாரித்துவரும் நேரத்தில் வழக்கில் கைதானவர்களின் பின்னணியோ பதற வைக்கிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற காரணத்தால் வழக்கின் விசாரணையின் கோணம் மாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோவை வைத்து நகை மற்றும் பணம் பறித்ததாக சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருநாவுக்கரசுவை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் தேடுவதையறிந்த திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தார். அந்தச்சமயத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், நீதிமன்றத்தில் சரண் அடையாமல் போலீஸாரிடமே சிக்கினார் திருநாவுக்கரசு. அதன்பிறகு இந்த வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

 பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைதான திருநாவுக்கரசு 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த இடம் குறித்த ரகசிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அவரைத் தேடிச் சென்று பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது வழக்குக்குத் தேவையான முக்கியத் தகவல்களை எங்களிடம் கூறினார். ஆனால், அதை வெளியில் தெரிவித்தால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். கைதானவர்களிடமிருந்து ஆபாச வீடியோக்கள், படங்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இதனால் நீதிமன்றத்தில் வழக்குக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கைதானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவுள்ளோம். 

அரசியல் பழிவாங்கும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆதாரங்கள், சாட்சிகள் இருந்தால் மட்டுமே யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். வாய்க்கு வந்த தகவலை எல்லாம் பொள்ளாச்சி பெண்கள் விவகாரத்தில் வெளிவருகின்றன. எனவேதான் தீவிர விசாரணைக்குப்பிறகு நடவடிக்கை எடுத்துவருகிறோம்'' என்றார். 

இதற்கிடையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்ற தகவல் வெளியானது. இது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்தலுக்காக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக சம்பந்தப்பட்ட அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி தரப்பில் கட்சித் தலைமைக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகரின் மகன் விவகாரம் பொள்ளாச்சி மாணவிகள், பெண்கள் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவின் பின்னணி குறித்து பேசியவர்கள், ``திருநாவுக்கரசுக்கு சொந்தமான வீடு ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ளது. பிரச்னை காரணமாக திருநாவுக்கரசு குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மாக்கினாம்பட்டி குடிபெயர்ந்துள்ளனர். இதனால் சின்னம்பம்பாளையத்தில் உள்ள வீட்டில்தான் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் இவரின் குடும்பம் ஈடுபட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். திருநாவுக்கரசுவின் நட்பு வட்டாரத்திலும் அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்கள் உள்ளனர். 

இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு மாணவிகளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் திருநாவுக்கரசு மற்றும் அவரின் நண்பர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. மாணவிகள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நீண்ட நாள்களாக நடந்த இந்தச் சம்பவத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தைரியமாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தற்போது அந்த மாணவிக்கு பலதரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. பொள்ளாச்சி போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் நிச்சயம் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் வழக்கில் மறைந்துள்ள அரசியல் பின்புலங்கள் வெளிச்சத்துக்கு வரும்" என்றனர். 

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அரசியல்  பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது ``பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமல்ல, மற்ற கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உள்ளது. பெண்கள் விவகாரம் என்பதால் இந்த வழக்கை போலீஸார் கவனமாக விசாரித்துவருகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக தகவல் பரப்பப்படுகிறது. வீடியோக்களை ஆய்வு செய்தாலே உண்மையாக இந்த வழக்கில் யார், யாருக்குத் தொடர்பு உள்ளது அம்பலமாகிவிடும். திருநாவுக்கரசு மற்றும் அவரின் நண்பர்களின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்களில் உள்ள பெண்களிடம் ரகசியமாக விசாரித்தாலே உண்மைகள் வெளிவந்துவிடும்" என்றார். 

திருநாவுக்கரசு போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பயத்தின் காரணமாகத்தான் இரண்டு வீடியோக்களை வெளியிட்டேன். வீடியோவில் கூறியதுபோல இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னுடைய நண்பர்கள் சிக்கியபிறகு கோவையிலிருந்து சேலத்துக்கு தப்பிச் சென்றதாகவும் அதன்பிறகு கல்லூரி மாணவி ஒருவரின் உதவியால் திருப்பதியில் பதுங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருப்பதியிலிருந்து சேலம் வந்து அங்கிருந்து ஈரோட்டுக்கு பஸ்சில் வந்து, வாடகை காரில் மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தபோது  சிக்கிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொள்ளச்சி போலீஸார் முயற்சி செய்துவருகின்றனர். 

பொள்ளாச்சி மாணவிகள், பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி சூழ்நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நாகராஜைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலர் உள்ளனர். குறிப்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கியப் பிரமுகர் ஒருவரின் மகன், அவரின் நண்பர்கள், வீடியோக்கள் ஒரு தரப்பினரிடம் சிக்கியுள்ளது. மேலும், இன்னொரு வீடியோவில் கட்சியின் சீனியர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் குறித்த பட்டியலை ஆதாரத்துடன் தேர்தல் சமயத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு ஆளுங்கட்சியினரின் மீதான சந்தேகப்பார்வை மேலும் வலுத்துள்ளது. பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் மறைந்துள்ள உண்மைகள் தேர்தலுக்கு முன் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் பின்புலம் கொண்டவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். 


[X] Close

[X] Close