பணவிநியோகத்தை தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் 21 பறக்கும் படைகள்: ஆட்சியர் | 21 flying squard to virudhunagar district for money issue: collector

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (11/03/2019)

பணவிநியோகத்தை தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் 21 பறக்கும் படைகள்: ஆட்சியர்

ஆட்சியர்

தேர்தலின்போது பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பிரசாரம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன? அனுமதி பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும். முறைகேடுகளை எப்படி தடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஆட்சியர்

பின்னர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1881 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து தணிக்கை செய்வதற்காக மண்டல அளவில் 126 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மொத்தம் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் கூடுதல் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

விருதுநகர்

விருதுநகர் மக்களவை மற்றும் சாத்தூர் இடைத்தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்கும் வகையில் ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணுக்கு முன் மாவட்டத்தின் கோடு நம்பரை இணைத்தால் மாவட்ட அளவில் தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.

விருதுநகர்

கோடைக்காலம் என்பதால் அதிக வாக்குச்சாவடிகள் உள்ள இடத்தில் பந்தல் அமைக்கப்படும். அதிக வாக்காளர்கள் வரும் வாக்குச்சாவடிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும். கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான தொகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும்.

ராஜபாளையத்தைச் சுற்றி உள்ள சில பகுதிகளில் பெண்கள் வாக்களிக்க வருவதில்லை. இதனால் 40 சதவிகிதம் வாக்குகளே பதிவாகியுள்ளன. எனவே, அப்பகுதியில் மகளிருக்கென தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் தவறு செய்யும் எண்ணம் ஏற்படுவதை தடுக்க திடீர் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆட்சியர்

ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கூட்டம் நடந்தது. யாருக்கும் குடிநீர் கூட ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், மேடையில் இருந்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டது என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.


[X] Close

[X] Close