`தேர்தல் நடத்தை விதிகள் அமல்!’ - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் | Election code of conduct announced in Salem

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (11/03/2019)

கடைசி தொடர்பு:13:03 (16/03/2019)

`தேர்தல் நடத்தை விதிகள் அமல்!’ - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.

கலெக்டர்


நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதையடுத்து, இன்று சேலம் கலெக்டர் ரோகிணி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அதில் ``தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. நான் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலராக இருக்கிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். 24 மணி நேரமும் தேர்தல் விதிமுறைகள் கண்காணிக்கப்படும்'' என்றார்.

``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருகிறது. சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 8,00,320 ஆண் வாக்காளர்களும், 7,92,090 பெண் வாக்காளர்கள் 77 இதரர் என மொத்தம் 15,92,484 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சேலம் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் மொத்தம் 1809 வாக்குச் சாவடிகள் இருக்கிறது.

இதில் புறநகர் பகுதியில் 81 பதற்றமான வாக்குச்சாவடிகளும், நகரப் பகுதியில் 66 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மொத்தம் 161 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கூராய்ந்து கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளச் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைக் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7020 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கைப்பேசி செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம். சேலம் பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து அறிந்துகொள்ள VOTER HELPLINE  கட்டணமில்லா தொலைபேசி எண் 1950க்கு நேரடியாக அழைத்து தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை அறிந்துகொள்ளலாம்'' என்றார்.


[X] Close

[X] Close