இந்தியா விஷன் 2020: அப்துல் கலாம் கனவுத் திட்டம் ராமேஸ்வரத்தில் தொடக்கம்! | Abdul Kalam's dream project 'India Vision 2020'. Volunteers start at Rameswaram

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (12/03/2019)

கடைசி தொடர்பு:10:28 (12/03/2019)

இந்தியா விஷன் 2020: அப்துல் கலாம் கனவுத் திட்டம் ராமேஸ்வரத்தில் தொடக்கம்!

 மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் கனவுத் திட்டமான இந்தியா விஷன் 2020-ஐ  நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் ஒரு கோடி தன்னார்வலர்களைப் பொறுபேற்கச் செய்யும் திட்டம் அவரது நினைவிடத்தில் தொடங்கப்பட்டது.

இந்தியா விஷன் 2020: அப்துல் கலாம் கனவுத் திட்டம் ராமேஸ்வரத்தில் தொடக்கம்!

நாட்டின் தென்கோடி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் பிறந்து தனது முயற்சியாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி  டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். நாட்டுக்காக எண்ணற்ற ஏவுகணைத் திட்டங்களைச் செயல்படுத்தி வலிமைமிக்க நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே தனது உயிரினையும் இழந்தார். `அக்னிச் சிறகுகள்' எனும் தன் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட அப்துல் கலாம், நாட்டின் வளர்ச்சிக்காக ``இந்தியா விஷன் 2020'' என்ற திட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றார். 
 

அப்துல் கலாம் கனவுத் திட்டத் தொடக்க விழா
 

இதன்படி நாட்டில் கல்வி, விவசாயம், அறிவியல், நீர் மேலாண்மை, தொழில் வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் வகுத்திருந்தார். இதைச் செயல்படுத்துவதன்மூலம் உலக நாடுகளிடையே இந்தியாவைத் தலைசிறந்த நாடாக உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்துல் கலாம் வரையறுத்த 2020-ம் ஆண்டு பிறக்க இன்னும் ஓராண்டே உள்ளது. இந்நிலையில், அவரது கனவுத் திட்டத்தை முன்னெடுக்கும் பணிகளில் நாடு முழுவதும் உள்ள 1,0,00,2,020  தன்னார்வலர்களை உருவாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லோர் வட்டம் என்ற அமைப்பின்மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஒவ்வோர் இந்தியரும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் ஒரு பகுதியையோ, தெருவையோ, ஒரு துறையையோ அல்லது ஒரு செயல் திட்டத்தையோ பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்சமாக இந்திய மக்கள்தொகையில் 1 சதவிகிதம் பேரை இதன் தன்னார்வலர்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா விஷன் 2020 திட்ட தன்னார்வலர்கள் 

இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நடந்தது. அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலையில் இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், `இந்தியா விஷன் 2020 - என் பொறுப்பு' என்ற அட்டையை அறிமுகம் செய்தனர். இவர்களைப் போன்று நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இதனை அறிமுகம் செய்ய உள்ளனர். இதற்கென, இந்தியா விஷன் 2020 ரதம் ராமேஸ்வரம் முதல் ஷில்லாங் வரை பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்துல் கலாமின் பிறந்த நாளான இந்த ஆண்டு அக்டோபர் 15-ல் 5,000 சமூகச் சிற்பிகள் சந்திப்பும், அடுத்த ஆண்டு 10,000 சமூகச் சிற்பிகள் சந்திப்பும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,524 பஞ்சாயத்துகளிலும் பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள்மூலம் கிராமப் பஞ்சாயத்து மற்றும் வளர்ச்சியின் மூலம் கிராமங்களைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் வகையிலான மாணவர்களைக் கண்டறிந்து கிராம மற்றும் நகர வார்டு பகுதி அளவிலான கலாம் பாசறை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை நல்லோர் வட்டம் அமைப்பின் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சசிக்குமார், தினேஷ், செந்தூர் பாரி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தைப் போன்றே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலத் தலைநகர்களிலும் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close