தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகப் புகார்! - நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு சீல் | nellai press club building has been sealed for election code violation

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:06 (16/03/2019)

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகப் புகார்! - நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு சீல்

நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் செய்தியாளர் கூட்டம் நடத்த அனுமதித்ததால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூட்ட அரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

காங்கிரஸ் பிரஸ் மீட்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெல்லை பத்திரிகையாளர் மன்றம் செயல்பட்டுவருகிறது. அங்கு, செய்தியாளர்கள் கூட்ட அரங்கம் உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்த கூட்ட அரங்கத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த தேசியச் செயலாளரான சஞ்சய்தத் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் எனப் புகார் எழுந்தது. அதனால், கூட்ட அரங்கத்தைப் பூட்டி சீல் வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டார். அதன்படி, நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் தளத்தில் உள்ள செய்தியாளர்கள் கூட்ட அரங்கத்தை, பாளையங்கோட்டை தாசில்தார் கனகராஜ் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.  ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே, ஒரு கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், பத்திரிகையாளர் மன்றத்தின் கீழ் தளத்தில் இருக்கும் ஓய்வு அறையையும் பூட்டி சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதனால், இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ’’கடந்த 2004-ம் ஆண்டு முதலாகவே நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் பிரஸ் மீட் நடத்தப்பட்டுவருகிறது. 

பத்திரிகையாளர் மன்றத்துக்கு சீல்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான பி.ஹெச்.பாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், இதுவரையிலும் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் சமயங்களில்கூட செய்தியாளர் சந்திப்பு நடந்ததுண்டு. நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் அவர்களின் கொள்கைகள் குறித்தும் தொகுதிக்கு என்ன செய்ய இருக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கவேண்டியது எங்களின் கடமை. 

அந்த வகையில், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினருடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது வழக்கம். இது வரையிலும் இருந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனைப் புரிந்துகொண்டிருப்பதால், எந்தவிதத்திலும் எங்களுடைய பணிக்கு இடையூறு அளித்ததில்லை. ஆனால், தற்போதைய கலெக்டரான ஷில்பா பிரபாகர்சதீஷ், அரசியல் பின்புலம் காரணமாகத் திட்டமிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். 

சீல் வைத்த அதிகாரிகள்

மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையைப் பத்திரிகை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே கருதுகிறோம். ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்கும் பத்திரிகைகளின் குரலை நசுக்கும் செயலாகும். இதுபோன்ற செயல்களை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர். 


[X] Close

[X] Close