`பழைய சிலைகளையே பயன்படுத்தவும்!’ - நீதிமன்ற உத்தரவுக்குப் பின் நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் கொடியேற்றம் | ekambaranathar temple festival started after court order

வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (12/03/2019)

கடைசி தொடர்பு:08:51 (12/03/2019)

`பழைய சிலைகளையே பயன்படுத்தவும்!’ - நீதிமன்ற உத்தரவுக்குப் பின் நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே பங்குனி உற்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏகாம்பரநாதரைத் தரிசனம்செய்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பங்குனி மாதத்தில் பத்து நாள் ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, புதியதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையில் தங்கம் கலப்பதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் குழுவினர் கோயிலில் உள்ள சிலைகளை ஆய்வுசெய்தனர். மேலும், சிலையில் தங்கம் இல்லை என்பதாலும், ஆகம விதிப்படி சிலை செய்யவில்லை என்பதாலும் அந்தச் சிலை தொடர்பான வழக்கின் அடிப்படையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. உற்சவர் இல்லாததால், இந்த ஆண்டு பங்குனி உற்சவம் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்துவந்தது. இந்த நிலையில், ஏற்கெனவே பயன்படுத்திவந்த பழைமையான சிலையை வைத்து பங்குனி உற்சவத்தை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று மாலை (11.03.2016) வழங்கப்பட்டது. அதில், ‘பழைய சிலையைக் கோயிலிலேயே சரிசெய்து, திருவிழாக்களின் போது பயன்படுத்த வேண்டும். இந்தப் பங்குனி உத்திரத் திருவிழா, ஐஜி பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.

பழைமையான சோமாஸ்கந்தர் சிலை

நேற்று காலை, பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், காலையில் கோயில் அருகே வயதான பெண் ஒருவர் இறந்துவிட்டதால், கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை கொடியேற்றம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பழைய சிலைகளை வைத்தே பங்குனி உற்சவம் நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதனால், கோயிலில் சிவபக்தர்கள் கூடி உடனடியாக கொடியேற்றத்தைத் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சிவபக்தர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 7 மணி அளவில் நீதிமன்றம் நகல் கிடைக்கப் பெற்ற பிறகு, திருவிழா தொடங்க அதிகாரிகள் அனுமதித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பழைய சோமாஸ் கந்தர் சிலையைக் காவல் துறை பாதுகாப்புடன் சிவாச்சாரியார்கள் வெளியே எடுத்துவந்து, கொடிமரம் அருகே வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர், கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு பங்குனி உற்சவம் தொடங்கியது.

அதிகாரிகளை முற்றுகையிட்ட பக்தர்கள்

இன்று காலை 10 மணி அளவில், சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி ஐஜி பொன்மாணிக்கவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வர உள்ளார். அவர் மேற்பார்வையில் பழைய சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்படும். இதனைத் தொடர்ந்து, நாளை இரவு முதல் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை பக்தர்கள் தரிசிக்கலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close