``தமிழகத் தேர்தல் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" - பிருந்தா காரத் | Brinda karat attacked ruling parties

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:07 (16/03/2019)

``தமிழகத் தேர்தல் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" - பிருந்தா காரத்

``தமிழகத்தில், ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெற உள்ள தேர்தல்மூலம் மத்தியில் பா.ஜ.க அரசு வீழ்த்தப்படுவதோடு, தமிழகத்தில் அ.தி.மு.க அரசும் கவிழ்க்கப்படலாம். எனவே, `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என புதுக்கோட்டையில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

பிருந்தா காரத்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "தமிழகத்தில் ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெற உள்ள தேர்தல்மூலம் பா.ஜ.க அரசு வீழ்த்தப்படுவதோடு, அ.தி.மு.க அரசும் கவிழ்க்கப்படலாம். எனவே, `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

2014 தேர்தலில் மோடியா... இந்த லேடியா... என்று மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தலின்போது சவால் விட்டார். அதில், மோடியைவிட லேடிதான் வென்றார். தற்போது, அப்படிப்பட்ட ஜெயலலிதாவை மறந்துவிட்டு, மோடிதான் எங்களுக்கெல்லாம் 'டாடி' என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறிவருகிறார். கஜா புயலால் 65 பேர் வரையிலும் உயிர் இழந்தனர். லட்சக்கணக்கான மரங்கள் சேதம் அடைந்தன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அப்போது மோடி எங்கே இருந்தார். கூட்டணி வைத்து அரசியல் செய்வதற்காகத் தற்போது தமிழகத்துக்கு  ஓடோடி வருகிறார். தமிழக அரசு கோரிய ரூ.15 ஆயிரம் கோடி புயல் நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை.

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய் வேண்டும். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின்போது மத்திய அரசு எதையும் செய்யவில்லை. ஆனால், ஒரு லட்சம் வீடுகளை கேரளா அரசு கட்டிக்கொடுத்தது. தமிழக அரசு புயலை வைத்து அரசியல்தான் செய்தது. மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புகளை இதற்கு முன்பு நம்நாடு சந்தித்ததே இல்லை. ரஃபேல் ஊழல்குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னார். நீதிமன்றத்திலும் அவர் பொய் சொல்கிறார். இது ஒருபுறம் என்றால், எங்கள் மாநிலத்தில் குட்கா ஆவணங்களைக் காணவில்லை என்கிறார் தமிழக முதல்வர்.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் வரிச்சலுகைகளை அளித்தார்கள்.

விதவை ஓய்வூதியத்தைக்கூட உயர்த்தவில்லை. 5 ஆண்டுகளில் சுமார் 48,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாறு செய்துவிட்டு, மாதந்தோறும் ரூ.500 தருவதாக மோடி தற்போது கூறுகிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக பிரதமர் மோடி கூறி ஏமாற்றிவிட்டார். பணமதிப்பு நீக்கம் செய்ததன்மூலம் ரூ.1 கோடி வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது" என்றார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாநிலக்குழு உறுப்பானர் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close