அடுத்தடுத்து சிக்கிய கடல் அட்டை, கஞ்சா! - ஏர்வாடி, தனுஷ்கோடியில் போலீஸ் வேட்டை | 500 kg of sea cucumber in Ervadi .. 50 kg of cannabis confiscated in Dhanushkodi

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (12/03/2019)

கடைசி தொடர்பு:11:40 (12/03/2019)

அடுத்தடுத்து சிக்கிய கடல் அட்டை, கஞ்சா! - ஏர்வாடி, தனுஷ்கோடியில் போலீஸ் வேட்டை

அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டை ஏர்வாடி பகுதியிலும், இலங்கைக்குக் கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா தனுஷ்கோடி பகுதியிலும் பிடிபட்டன.

ஏர்வாடி அருகே பிடிபட்ட 500 கிலோ கடல் அட்டை 

தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதைத் தடுக்க சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்புப் பிரிவுகள் இயங்கி வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் திருச்சி மண்டலத்தில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன்குமார் ரவுத்ரி நேற்று ராமநாதபுரத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை ஏர்வாடி அருகே போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த டாடா சுமோ வாகனத்தில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டை பிடிபட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரை எஸ்.ஐ-கள் அய்யனார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழுமக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனுஷ்கோடியில் பிடிபட்ட கஞ்சா பார்சல்
 

இதனிடையே இன்று காலை தனுஷ்கோடி வடக்குக் கடற்கரையில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சாவினை தனுஷ்கோடி போலீஸார் கைப்பற்றினர். இன்று காலை தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரு சாக்கு மூடைகளைத் தனுஷ்கோடி போலீஸார் கைப்பற்றினர். அதில் 23 பார்சல்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா, பீடி இலைகள் போன்ற கடத்தல் பொருள்கள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close