வேலூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்! | Vellore MLA office seal after election announcement

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:10 (16/03/2019)

வேலூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வேலூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசு ஓய்வு இல்லங்கள், சுற்றுலா மாளிகை மற்றும் இதர அரசு குடியிருப்புகளை எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. அரசால் வழங்கப்பட்ட கட்டடங்களை, மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் பறக்கும்படையினர் காரில் சோதனை நடத்திய காட்சி.

அதன்படி, வேலூர் அண்ணாசாலையில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் தளர்ந்த பிறகு, எம்.எல்.ஏ அலுவலக சாவியை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 39 பறக்கும்படையினர், அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் அதிக அளவில் பொருள்களை எடுத்துச்செல்வோர், அதற்குரிய ஆவணங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close