`உறுதியளிக்கும் கட்சிக்கே ஆதரவு!’‍ தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு | Tamil Nadu Farmers Association Announcement regarding election

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:10 (16/03/2019)

`உறுதியளிக்கும் கட்சிக்கே ஆதரவு!’‍ தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

``விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதாகவும், கோரிக்கைகளை ஏற்பதாகவும் உறுதியளிக்கும் கட்சிக்கே நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம்’’ என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.

வேலூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயற்குழு கூட்டம், வேலூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், ``விவசாயிகளின் வங்கிக் கடன்களை பாகுபாடு இல்லாமல் தள்ளுபடி செய்யவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் போர்க்கால அடிப்படையில் இணைக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும், வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கவேண்டும். 

தட்கல் முறையைக் கைவிட்டு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைப் போல் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை இலவச மின் இணைப்பாக மாற்ற வேண்டும். விவசாய உப தொழில்களுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கவேண்டும். தெலங்கானாவைப் போல் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.10,000 வழங்க வேண்டும்.

அனைத்து விளை பொருள்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவதைப்போல் இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் உயிரிழக்கும் விவசாய குடும்பங்களுக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்போம்'' என்று முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.


[X] Close

[X] Close