`மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத அவல நிலை! - எடப்பாடியைச் சாடும் பாலகிருஷ்ணன் | Press meet by balakrishnan in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:45 (12/03/2019)

`மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத அவல நிலை! - எடப்பாடியைச் சாடும் பாலகிருஷ்ணன்

``அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள், மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது'' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.

பாலகிருஷ்ணன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அந்தச் சமயம் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் காரணத்தால் தமிழகம் முழுவதிலும் வாக்குப் பதிவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மதுரையில் பேட்டி அளித்த பாலகிருஷ்ணன்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்ட செயல் அவரை மிரட்டும் நோக்கமாக இருக்கலாம். காவல்துறையின் செயல்பாட்டிற்குக் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.  பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை  வழங்குவதற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். நிர்மலாதேவி வழக்கை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கான பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது. மோடி மீதான அதிருப்தி, ஈ.பி.எஸ் மீதான எதிர்ப்பு அலையாலும் தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலிலும் பா.ஜ.க -ஈ.பி.எஸ் ஆட்சி படுதோல்வியடையும்'' என்றார்.


[X] Close

[X] Close