`தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்!’ - தேர்தல் ஆணையத்திடம் பிஷப் கவுன்சில் கோரிக்கை | parliamentary voting date to be changed, says bishop council of tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:11 (16/03/2019)

`தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்!’ - தேர்தல் ஆணையத்திடம் பிஷப் கவுன்சில் கோரிக்கை

ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்துவது, கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் வழிபாட்டுக்கு இடையூறாக இருக்கும் என  பிஷப் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. 

பிஷப் கவுன்சில் கடிதம்

நாடு முழுவதும், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஏப்ரல் 18-ம் தேதி  நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. மதுரையில், 'சித்திரைத் திருவிழாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள் என்பதால், அந்தச் சமயத்தில்  வாக்குப்பதிவு நடத்தினால் சிரமம் ஏற்படும்' என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி  கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற இருப்பதால், அந்த வழிபாட்டுக்கும் இடையூறாக இருக்கும் என்பதால், தேர்தல் தேதியை வேறு தேதிக்கு மாற்றிவைக்க வேண்டும் என கிறிஸ்துவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ’’தமிழகம் மற்றும் புதுவையில், ஏப்ரல் 18-ம் தேதி கிறிஸ்துவர்களின் புனித நாள்களில் ஒன்றான புனித வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில், வாக்குப்பதிவை வைத்திருப்பது கிறிஸ்துவர்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 

தேர்தலில் ஈடுபடும் கிறிஸ்துவ சகோதர  சகோதரிகள் அன்றைய நாள் வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படும். அத்துடன், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் ஆலய வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருப்பதால், கிறிஸ்துவ மக்கள் வழிபாடு நடத்த பெரும் இடையூறாக இருக்கும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அதனால், கிறிஸ்துவ மக்களின் கோரிக்கையை ஏற்று, மாற்று தேதியில் தேர்தலை நடத்த ஆணையிட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். அதனால், தேர்தல் தேதியில் மாற்றம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.


[X] Close

[X] Close