போக்ஸோ சட்டம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை! - பொள்ளாச்சி விவகாரத்தில் தகிக்கும் திருமாவளவன் | Thirumavalavan on pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (12/03/2019)

கடைசி தொடர்பு:14:15 (12/03/2019)

போக்ஸோ சட்டம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை! - பொள்ளாச்சி விவகாரத்தில் தகிக்கும் திருமாவளவன்

'தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். 

தொல். திருமாவளவன்

தமிழகத்தில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தி.மு.க, இந்த விவகாரத்தைவைத்து அரசியல் பண்ணுவதாக அ.தி.மு.க குற்றம் சாட்டியதோடு, தி.மு.க-வினருக்குத்தான் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தது. 

கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், ``பொள்ளாச்சியில் ஒரு கும்பல்,  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.  அந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, கடுமையாகத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து தனது மேற்பார்வையின்கீழ் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.  இதற்காக, எதிர்வரும் 14 -ம் தேதி காலை, சென்னையில் எனது தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கும்பலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதிகாரத்தில் உள்ள சிலர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில், அதை ஆளுங்கட்சியினர் மறுத்தனர். ஆனால், இப்போது  ஆளுங்கட்சியைச் சேர்ந்த ‘பார்’ நாகராஜ் என்பவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர், பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால், அவரை ’பார்’ நாகராஜ் என்று எல்லோரும் அழைப்பதாகத் தெரிகிறது.  அவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகார் அளித்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய வழக்கில்,  பிப்ரவரி 27-ந்தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பார் நாகராஜ்,  அடுத்த நாளே ஜாமினில் வெளியே வந்துவிட்டார். அதிலிருந்தே அவரது அரசியல் பலத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருபுறம் சிலர்மீது குண்டர் சட்டம் போடுவதாகக் கூறிக்கொண்டு, இன்னொரு புறம் முக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சி ஈடுபடுகிறதோ என்ற ஐயத்தை இது வலுப்படுத்துவதாக உள்ளது. பார் நாகராஜின் கூட்டாளிகள் பலர், ஆளும் கட்சியில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே, இந்த வழக்கை காவல் துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் தனது மேற்பார்வையின்கீழ் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என  வலியுறுத்துகிறோம். 

திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், நான்குபேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் அதில் ஈடுபட்டிருப்பதாக காவல் துறை கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.  ’பார்’ நாகராஜ் உட்பட, அதில் தொடர்புடைய அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

சமூகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் சனாதன கருத்தியலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில், வெறுப்புக் குற்றங்களும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிப்பதற்கு இங்கே செல்வாக்குப் பெற்றுவரும் சனாதன சக்திகளே முதன்மையான காரணமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். 

திருமாவளவன்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே போகின்றன.  போக்ஸோ சட்டம் உட்பட பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் தமிழ்நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின்கீழ் பதியப்படும் வழக்குகளில் 21.5% வழக்குகளில் மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளது என 2016-ஆம் ஆண்டு, தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை கூறுகிறது. எனவே, இந்தப் பிரச்சனையில் தேசிய மகளிர் ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார். 


[X] Close

[X] Close