தேர்தல் விதிமீறலைக் கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகள்! | 12 flying troops in Ramanathapuram district to observe election violations

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:11 (16/03/2019)

தேர்தல் விதிமீறலைக் கண்காணிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விதிமீறல்களைக் கண்காணிக்க 12 பறக்கும் படைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க தயாராகும் பறக்கும் படை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணிக்க தலா 3 பறக்கும் படை குழுக்களும், தலா 3 நிலைத்த கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டாட்சியர் அல்லது வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல் சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், ஒரு வீடியோ பதிவாளர் என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் தொடர்பான கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளைத் தெரிவிக்கவும் தேர்தல் தொடர்பான விளக்கங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா சேவை எண் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இந்த மையத்திற்கு வரும் புகார்கள் கண்காணிப்புக் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் புகைப்படம், வீடியோவுடன் எளிதில் பதிவிடும் வகையில் c-VIGIL என்ற செல்போன் செயலியினை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்தச் செயலியினை கூகுள் பிளேஸ்டோர் தளத்திலும், இந்தியத் தேர்தல் ஆணைய தளத்திலுமிருந்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

தேர்தல் தொடர்பான விதிமீறல்களைக் கண்காணிக்கும் பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டதுடன், கண்காணிப்புப் பணியின் போது நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கினார். மேலும், இந்தக் கண்காணிப்புப் பணிகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
 


[X] Close

[X] Close