எல்லோர்கிட்டேயும் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! - பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கூறிய பெண் வெளியிட்ட ஆடியோ | The Girl who complained in pollachi case releases an audio

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (12/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (12/03/2019)

எல்லோர்கிட்டேயும் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! - பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கூறிய பெண் வெளியிட்ட ஆடியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி கிழக்குக் காவல்நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரும் அதைத் தொடர்ந்து வெளியான தகவலும் கடந்த சில நாள்களாக பொள்ளாச்சியைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.

 

 ``பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்பவன் தன்னோடு ஃபேஸ்புக் மூலமாக நட்பாகி காலப்போக்கில் காதலிப்பதாகச் சொன்னான். நானும் நம்பி காதலித்தேன். பிறகொருநாள் நண்பர்களோடு `அவுட்டிங்’ போகலாம் என்றுகூறி திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரோடு என்னையும் அழைத்துச் சென்றான். சென்ற இடத்தில் நான்குபேரும் சேர்ந்து, என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். செல்போனில் ஆபாசப் படம் எடுத்துவிட்டனர். 4 பேர் இருந்ததால் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அணிந்திருந்த செயினையும் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி புகார் கொடுத்தார் 

அந்தப் புகாரின் அடிப்படையில். ஃபேஸ்புக் மூலம் கல்லூரிப் பெண்களிடம் நட்பாகி, 'அவுட்டிங்' என்ற பெயரில் வெளியில் அழைத்துச்சென்று பலவந்தமாக ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டது.

பொள்ளாச்சி

``எப்போ தேர்தல் தேதி அறிவித்தார்களோ... உடனே வந்து என்னைப் பற்றி, என்னுடைய குடும்பத்தைப் பற்றி வெளியில் கொண்டுவந்து அரசியலாக்கிட்டாங்க. இந்த மாதிரி சூழலில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள்'' என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு விஸ்வரூபம் எடுத்துவரும் சூழலில், அதில் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண், வாட்ஸ்அப் வழியாக ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் உள்ளது அப்படியே...

``எல்லோருக்கும் வணக்கம்.  நான், பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பேசுகிறேன். சபரி, சதீஷ், வசந்த், திருநாவுக்கரசு இவங்கமேல கம்ப்ளைன்ட் கொடுத்தது நான்தான். காரணம், இனிமேல் எந்த ஒரு பெண்ணும் என்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டும்தான். எங்க குடும்ப நண்பரான மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒருத்தங்ககிட்ட இதைப்பற்றி நாங்க பேசியிருந்தோம். அவர், ஆளும்கட்சி பிரமுகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அதற்கடுத்த நாளே எங்களை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போனாங்க. நடந்த எல்லாவற்றையுமே நாங்கள் சொன்னோம். அவர், உடனடியா எஸ்.பி பாண்டியராஜன் மற்றும் டி.எஸ்.பி ஜெயராமன் ஆகியோரிடம் பேசி ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லியிருந்தார். அன்று நைட்டே திருநாவுக்கரசைத் தவிர மற்ற எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதற்கடுத்த கொஞ்ச நாளிலேயே திருநாவுக்கரசையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ஆனால், இதை சிலர் அரசியலாக்கிட்டாங்க. 

பொள்ளாச்சி

எனக்கு அந்த ஆளும்கட்சி பிரமுகர் கொடுத்த வாக்கு என்னவென்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் நான்தான் என்பதும் என் குடும்பத்தைப் பற்றிய தகவலும் கண்டிப்பாக வெளிவராது என்று சொல்லியிருந்தார். இந்த வழக்கைத் தொடர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்போ தேர்தல் தேதி அறிவித்தார்களோ... உடனே வந்து என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி வெளியில் கொண்டுவந்து அரசியலாக்கிட்டாங்க. இந்த மாதிரி சூழலில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். இதன் மூலமா தப்பு செஞ்சவங்க கண்டிப்பா தப்பிச்சிருவாங்க. இந்த வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்க யாருமே இல்லை. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் யாரும் இல்லை.  அதனால, இதை அரசியல் ஆக்காமல், தயவுசெய்து இதற்கான  நடவடிக்கை எடுக்குமாறு எல்லோர்கிட்டேயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 


வதந்தி பரப்புகிற யார்கிட்டயாவது ஆதாரம் இருந்தால்,  அதைக் கொடுத்து உடனடியா இதற்கு ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்று எல்லோர்கிட்டயும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தினால் நானும் எனது குடும்பமும் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். இந்த விஷயத்தில், முதன் முதலாக உதவிசெய்தது அந்த ஆளும்கட்சிப் பிரமுகர்தான். அவருக்கு ரொம்ப நன்றி.  தேவைப்பட்டால், இந்த செய்தியை மீடியா வரைக்கும் கொண்டுபோவோம். இந்த நாலு பேர் செஞ்ச கொடுமையைவிட, அரசியல் ஆதாயத்துக்காக சிலபேர் செய்கிற செயல் என்னையும் என் குடும்பத்தையும் தற்கொலை செய்யத் தூண்டுகிறது. இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த யாருமே எங்களுக்கு ஹெல்ப் பண்ண வரலை. மலுமிச்சம்பட்டியைச் சார்ந்த பிரமுகர் மட்டும்தான் முன்வந்து உதவி செய்தவர்''  என்று குறிப்பிட்டுள்ளார். 

பின்குறிப்பு: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என்ற பெயரில் இப்படியொரு ஆடியோ வலம் வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் பேச முன்வரவில்லை. இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதம் கிளம்பியுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close