`உள்ளூர் போலீஸ், ஆளும் கட்சியின் ஆசியுடன்தான் நடந்திருக்கு!'- புதிரை கிளப்பும் கே.பாலகிருஷ்ணன் | Communist leader K.Balakrishnan about Pollachi Sexual Abuse Case

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (12/03/2019)

`உள்ளூர் போலீஸ், ஆளும் கட்சியின் ஆசியுடன்தான் நடந்திருக்கு!'- புதிரை கிளப்பும் கே.பாலகிருஷ்ணன்

``ன்ன நம்பி தானே வந்தேன்...'' நம்பிக்கை துரோகத்தைவிட மோசமாக ஆயுதம் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த நம்பிக்கைதான் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது. பொள்ளாச்சி காவல்நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகப் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் 4 இளைஞர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம்



கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளின் ஆபாச வீடியோக்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டன.  இந்த விவகாரத்தில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்பட்ட திருநாவுக்கரசை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``கடந்த 6 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம் பெண்களை, ஒரு சமூக விரோதக் கும்பல், காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாசப் படமெடுத்து, சுற்றுக்கு விட்டு குற்றம் இழைத்த அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இத்தகைய சம்பவத்துக்கு காவல்துறையும், அ.தி.மு.க-வின் உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கொடுமைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவங்கள் மீது எடப்பாடி அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு நடந்துகொள்வது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

கே.பாலகிருஷ்ணன்



உள்ளூர் காவல்துறைக்குத் தெரியாமலோ அல்லது ஆளும் கட்சியின் ஆசியும், ஈடுபாடும் இல்லாமலோ இது நீடித்து நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் அ.தி.மு.க-வின் உயர்மட்ட பிரமுகரின் குடும்ப உறுப்பினர் பெயர் இதில் அடிபடுகிறது. தமிழகத்தில் அனுதினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை கொடூரங்களைக் கண்டுகொள்ளாத அ.தி.மு.க, திடீரென பொள்ளாச்சி பிரச்னையில் மட்டும் தன் நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனைத் தாக்கிய அ.தி.மு.க உள்ளூர் முக்கியஸ்தர் பார் நாகராஜன் மீது அப்போதே நடவடிக்கை எடுக்காமல், நிர்பந்தம் அதிகமான பிறகு, இப்போது கட்சியை விட்டு நீக்கியிருப்பதும் கேள்விகளை உருவாக்குகிறது.

நாகராஜன் மீது வெறும் அடிதடி வழக்கு பதிவு செய்து, காவல்துறை திட்டமிட்டு உண்மைகளை மறைக்கிறது. குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, பாலியல் குற்றங்களை ஒரு பெண் போலீஸ் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும், ஆனால், ஆண் அதிகாரி விசாரித்ததாகவே தகவல் கிடைக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஊடக சந்திப்பு நடத்தி, மொபைல் போன்களில் குற்றச்செயல்களின் பதிவு இல்லை, அரசியல் பிரமுகர்கள் ஈடுபாடு இல்லை என்று கூறுவதும், அமைச்சர், அ.தி.மு.க உயர்மட்ட பிரமுகர் மீது குற்றம் சாட்டும் வலைதளவாசிகள் மீது சைபர் குற்றப் பிரிவு மூலம் அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதும்கூட பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பொள்ளாச்சி

அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்கைப் போலவே, உயர்மட்ட குற்றவாளிகளை விட்டுவிட்டு, கிடைத்தவர்களை மட்டும் சிக்க வைப்பது என்ற நிலைமை இதிலும் தெரிகிறது. இதுவரை 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக மாதர் சங்கமும், அனைத்துக் கட்சிகளும் இப்பிரச்னையில் தலையிட்டுக் கண்டன இயக்கம் நடத்தியுள்ளன. சட்ட ரீதியான தலையீட்டுக்கும் ஏற்பாடு நடக்கிறது.

இச்சம்பவத்தை நேரில் சென்று விசாரிப்பதற்குக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச்செயலாளர் ஏ.ராதிகா, கட்சியின் கோவை மாவட்டச்செயலாளர் வி.ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு நாளை (13-3-2019) பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதும், அரசின் பாராமுகமும் தமிழகத்தில் மோசமான சட்டம், ஒழுங்கு சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இச்சூழலில், உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்துவதே உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும். பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கமின்றி புகார் கொடுக்க உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். அக்குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close