சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு! | Kerala Election Officer says wont allow propaganda over sabarimala on votes

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (16/03/2019)

சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

சபரிமலை விவகாரத்தை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்ததற்கு கேரளத்தின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டீக்கா றாம் மீணா


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தின. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சபரிமலையில் பெண்கள் செல்ல வழிவகை செய்தது. சபரிமலை விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு வலுசேர்க்கும் என பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நம்புகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரம் செய்யக்கூடாது என்றும். சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறையை மீறும் செயல் எனவும் கேரள மாநிலத் தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீணா தெரிவித்துள்ளார்.

ஜாதி, மதம் குறித்து பேசி வாக்கு சேகரிக்கக்கூடாது என்பதால் சபரிமலை விவகாரம் குறித்து பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சபரிமலை

 

மிசோரம் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கேரளத்துக்கு வந்துள்ள பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜாசேகரன் கூறுகையில், ``சபரிமலையில் நடந்த பிரச்னை நாளை பிற வழிபாட்டுத்தலங்களிலும் நடக்கலாம். கடவுள் நம்பிக்கை, ஆசாரம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். எனவே, சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் மனு அளிப்போம்" என்றார். இதுபோன்று கேரள பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுரேந்திரன், கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் தேர்தல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். 


[X] Close

[X] Close