விருதுநகரில் மாயமானவர் திருப்பூரில் மரணம் - 4 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் உடலைத் தோண்டும் சி.பி.சி.ஐ.டி | CBCID Investigate Virudhunagar over man missing case

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (12/03/2019)

கடைசி தொடர்பு:15:06 (13/03/2019)

விருதுநகரில் மாயமானவர் திருப்பூரில் மரணம் - 4 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் உடலைத் தோண்டும் சி.பி.சி.ஐ.டி

பல வருடங்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போன வழக்கில், 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் இறந்தவரின் உடலைத் தோண்டி சி.பி.சி.ஐ.டியினர் பரிசோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரின் மகன் செல்வராஜ். கடந்த 2007- ம் ஆண்டு செல்வராஜ் தன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். தன்னுடைய மகன் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கடந்த 12 வருடங்களாகக் காத்திருந்த முத்துவேல், அதன்பிறகு நம்பிக்கை இழந்துபோய் கடந்த 2018 -ம் ஆண்டு திருச்சுழி காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். இந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி-யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிய சி.பி.சி.ஐ.டி துறையினர், கடந்த 2015-ல் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டவரின் புகைப்படத்தை முத்துவேலின் மகன் செல்வராஜின் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

விருதுநகர்

இருவரும் ஒரே ஆளாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி-யினர் திருப்பூர் தெற்குப் பகுதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட அந்த தனியார் நிறுவன ஊழியரின் உடலைத் தோண்டி பரிசோதிக்கும் முயற்சியில் இன்று இறங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி மற்றும் திருப்பூர் காவல்துறையினரின் முன்னிலையில் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வரும் அந்த உடலை டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்போவதாகவும், அதன்பிறகே உண்மைத் தன்மை தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் காணாமல்போன வழக்கில், 4 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவரின் உடலைத் தோண்டி எடுக்கும் பணியால் அப்பகுதி முழுவதும் காலை முதலே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.


[X] Close

[X] Close