``உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட யாரையும் நாங்கள் வற்புறுத்தவில்லை!'' - ஆர்.எஸ்.பாரதி விளக்கம் | We do not insist on competing in the symbol of UdhayaSooriyan says RS Bharathi

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (12/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (16/03/2019)

``உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட யாரையும் நாங்கள் வற்புறுத்தவில்லை!'' - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

'தி.மு.க கூட்டணிக் கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும்' என்று கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதே தி.மு.க தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் பரவியதையடுத்து, தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

 

ஜவாஹிருல்லா

இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாததற்கான காரணம் குறித்துப் பேசிய, அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா,  ``உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதில் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கறாராக இருந்தோம். அதற்குக் காரணம்... பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளர், வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதென்பது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணானது! எனவே, நாங்கள் அதில் எள்ளளவும் விட்டுக்கொடுக்கவில்லை. எங்களது இந்த உறுதிப்பாடே, சீட் கிடைக்காமல் போனதற்கான காரணமாகவும் இருக்கலாம்!'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சின்னம் விஷயத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிலை குறித்துப் பேசியவர், ``விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது பதிவு பெற்ற ஓர் அரசியல் கட்சி. எனவே, அந்தக் கட்சியின் தலைவரான தோழர் திருமாவளவன், நாளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாரென்றால், அவர் தி.மு.க உறுப்பினராக வேண்டும். அப்படியாகும்போது, அவர் தன்னை வி.சி.க-வின் உறுப்பினர் என்று சொல்லிக்கொள்ள முடியாது'' என்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

திருமாவளவன்

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு,  ``நாங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்'' என்று கருத்து தெரிவித்தார். மேலும், தனிச்சின்னம் விவகாரம் குறித்துப் பேசியவர், `` `உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது' என்று தி.மு.க தரப்பில் எங்களுக்கு ஆலோசனைதான் தரப்பட்டதே தவிர... எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதென்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தனித்த அடையாளத்தை மீட்டெடுப்பதற்கும் அல்லது தக்கவைப்பதற்கும் பயன்படுகிறது. எனவே, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்!'' என்றார் உறுதியாக.

சின்னம் விவகாரம் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திவரும் சூழலில், தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதியிடம் இவ்விவகாரம் குறித்து நாம் பேசினோம்... ``சின்னம் பற்றி யாரும் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. இனிமேல்தான் இதுகுறித்து தலைவர்கள் சொல்வார்கள். ஆனால், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த ஒப்பந்தத்தில் இரண்டு கட்சியினருமே கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில், ஒப்பந்தம் நிறைவேறிவிட்டது... மற்றபடி எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பதெல்லாம் அந்தந்த கட்சிகளினுடைய தலைவர்கள் விருப்பம்தான். 'உதயசூரியன் சின்னத்தில்தான் நீங்கள் போட்டியிடவேண்டும்' என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை!'' என்றார். 


[X] Close

[X] Close