காவல்நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் - கொலை மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Women tries Self immolation at tirupur police station

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (12/03/2019)

காவல்நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் - கொலை மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூரில் காவல்நிலைய வளாகத்தில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தீ குளிக்க முயற்சி

திருப்பூர் கள்ளம்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இன்றைய தினம் இவர் திருப்பூர் வடக்கு காவல் நிலைய வளாகத்துக்குள் புகுந்து தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால், அதற்குள் அந்தக் காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, ``என் கணவர் மாரிமுத்துவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்போது இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் தனியாக வசித்து வரும் நிலையில், என் கணவரும், எங்களின் இரண்டு மகள்களும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதுபற்றி ஏற்கெனவே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். ஆனால், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்றைய தினமும் எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. காவல்துறையினர் இதற்குமேலும் தாமதிக்காமல் எனது புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் குறிப்பாக என் உயிருக்கும், உடமைகளுக்கும் முறையாக பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது காவல்நிலைய வளாகத்தை சிறிது நேரம் பரபரப்பாக்கியது.


[X] Close

[X] Close