`யார் மகனுக்கு ஆபாசக் கும்பலுடன் தொடர்பு?’ பொள்ளாச்சி ஜெயராமன் - தென்றல் செல்வராஜ் மோதல்! | We are ready to face any trials in Pollachi sexual abuse case - Deputy speaker Pollachi Jayaraman

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (12/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (12/03/2019)

`யார் மகனுக்கு ஆபாசக் கும்பலுடன் தொடர்பு?’ பொள்ளாச்சி ஜெயராமன் - தென்றல் செல்வராஜ் மோதல்!

`யார் மகனுக்கு ஆபாசக் கும்பலுடன் தொடர்பு?’ பொள்ளாச்சி ஜெயராமன் - தென்றல் செல்வராஜ் மோதல்!

பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைதாகியுள்ள நான்கு பேருக்கும் ஆளும்கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதற்கேற்ப, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, காவல்துறையிடம் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில், பொள்ளாச்சி 34 வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் கைது செய்யப்பட்டார். அவரை உடனே காவல்துறை பிணையில் விடுவித்தது.

அதன் பின்னரே இந்த வழக்கின் பின்னணியில் ஆளும்கட்சியினர் மீதான சந்தேகங்களும் புகார்களும் வலுக்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க சீனியர் தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கும் இந்த ஆபாச வீடியோ கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்தார் பொள்ளாச்சி ஜெயராமன். அவருடைய தீவிர ஆதரவாளரும் பொள்ளாச்சி தொகுதி எம்.பி-யுமான மகேந்திரன், கோவை எஸ்.பி பாண்டியராஜனை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார். அதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தாம் வலியுறுத்தியதாக மகேந்திரன் பேட்டியளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை - கைது செய்யப்பட்டவர்கள்

அதற்குப் பின்பும், ஆபாச வீடியோ விவகாரத்தில் ஆளும்கட்சியினர் பலருக்குத் தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் பரவின. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவுக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டத் தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுடன் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. திருநாவுக்கரசுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியது, இதற்கு ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டது. 

பொள்ளாச்சி சம்பவம் பற்றி தென்றல் செல்வராஜ்இதுகுறித்து தென்றல் செல்வராஜ் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, எல்லோரும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவதைப் போலீஸார் தடுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில், என் மகனை சம்பந்தப்படுத்தி பொள்ளாச்சி ஜெயராமன் பேசியிருக்கிறார். இது அபாண்டமானது. என் மகனை அழைத்து வந்து, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நான் தயார். பொள்ளாச்சி ஜெயராமன் தயாரா?’’ என்று கேள்வி எழுப்பினார். 

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டதற்கு, ‘‘இப்படி ஒரு தவறு நடந்திருக்கிறது என்று கண்டுபிடித்து, வெளியில் கொண்டு வந்ததே நான்தான். நான் மட்டும் இந்த விவகாரத்தை போலீஸாரிடம் எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால், அப்படியே அமுங்கிப் போயிருக்கும். என் மீது பழி போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இப்படி ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக, மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் போனில் சொன்னபோது, நான் சென்னையில் இருந்தேன். நான்தான் போலீஸில் பேசி, புகார் கொடுக்க வைத்தேன்.

பொள்ளாச்சி சம்பவம் பற்றி துணை சபாநாயகர்அதன் பிறகு, பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுபற்றி போலீஸாரிடம் நான்தான் பேசி வருகிறேன். ஒரு குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகத் தெரிவித்ததும், அவனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.பி-யைச் சந்திக்குமாறு பொள்ளாச்சி எம்.பி-யை நான்தான் அனுப்பி வைத்தேன். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்துவிட்டனர். அதற்குப் பிறகு, கனிமொழி இங்கே வந்து போராடுவது எதற்காக? மு.க.ஸ்டாலின், சபரீசன் போன்றோர்தான் என் மீதான பொய்ப்புகாருக்குப் பின்னணியாக உள்ளனர். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னது குற்றமா?

எனக்கோ, என்னுடைய மகன்களுக்கோ தொடர்பு இருப்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. பாதிக்கப்பட்ட பெண், நாங்கள் செய்த உதவி பற்றி மேடையிலேயே சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால், நாங்கள்தான் வேண்டாமென்று கூறிவிட்டோம். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உதவி செய்யச் சென்றவர் மீது இப்படிப் பழிபோடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை; நீதியுமில்லை. இப்படி உதவி செய்வோர் மீது பழி போட ஆரம்பித்தால், எதிர்காலத்தில் யாரும் எதற்காகவும் உதவ முன் வரமாட்டார்கள். தென்றல் செல்வராஜ் என்ன வேண்டுமானாலும் பேசுவார். உண்மை அறியும் சோதனைக்கு மட்டுமில்லை. சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ, இன்டர்போல் யாரை வைத்து விசாரித்தாலும் அதற்கு நானும் என் மகன்களும் தயார்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் அரசியல்ரீதியான மோதல்கள் வலுத்து வருவது, தேர்தலை மையப்படுத்தியே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் அரசியலால் இந்த ஆபாச அரக்கர் கும்பலில் உள்ள யாரும் தப்பிவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் ஒரே கவலை.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close