`சேலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர்!' - 19-ம் தேதி வெளியாகிறது தீர்ப்பு | Judgement will be issued over sexual harassment case near salem

வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (12/03/2019)

கடைசி தொடர்பு:20:49 (12/03/2019)

`சேலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர்!' - 19-ம் தேதி வெளியாகிறது தீர்ப்பு

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை விஷ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சேலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் பெற்றோர்களோடு உறங்கிக் கொண்டிருந்த சிறுமி பூங்கொடியை 5 காம மிருகங்கள் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்து மரணம் அடைந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றனர். அதன்படி சேலம் நீதிமன்றத்துக்குச் சென்றோம். நீதிபதி வரும் 19-ம் தேதிக்குத் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், பழனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நெசவுத் தொழில் செய்து ஜீவனம் செய்து வந்தார்கள். மூத்த மகள் பூங்கொடி (வயது 10) சென்றாயம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். பரமசிவத்தின் குடும்பம் ஏழ்மையான குடும்பம்.

கடந்த 2014 பிப்ரவரி 14-ம் தேதி வழக்கம்போல இரவு சாப்பிட்டுவிட்டு குடும்பத்தோடு உறங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு 11:00 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த பூபதி, ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது அருந்திவிட்டுப் போதையில் கோயிலில் அமர்ந்திருக்கிறார்கள். கதவு இல்லாத வீட்டில் பரமசிவத்தின் குடும்பத்தினர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்த இந்த 5 பேரும் அவரின் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி பூங்கொடியின் வாயில் துணியை வைத்து அழுத்தி டூவிலரில் அருகில் உள்ள காட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.

குற்றவாளிகள்

ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மதுவை 5 பேரும் அருந்திவிட்டு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுமி பூங்கொடியை ஒவ்வொருவராக மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இந்தக் காம வெறி பிடித்த மிருகங்களின் வன்கொடுமையை தாங்க முடியாத சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அதை அறிந்தும் உயிர் பிரிந்த நிலையிலும் அந்த காமக் கொடூரர்கள் உயிரற்ற உடலில் வன்கொடுமை செய்தார்கள். பிறகு  நரபலி என்று நாடகம் நடத்துவதற்காக சிறுமியின் உடல் முழுவதும் திருநீரை பூசி அருகில் உள்ள மரத்தில் தொங்க விட்டுச் சென்றுவிட்டார்கள். அடுத்த நாள் சிறுமி காணாமல் போனதையடுத்து ஊரே தேடிக் கொண்டிருந்தபோது இவர்களும் அவர்களோடு சேர்ந்து தேடினார்கள்.

பிறகு காவல்துறைக்கு தெரியவந்ததை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அதுவரை ஊர்மக்கள் பரமசிவம் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள். தன் ஊர் பசங்கத்தான் இந்தக் கொடுமையை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்ததும் பரமசிவத்திடம் வழக்கைத் திரும்ப பெற வலியுறுத்தினார்கள். இதனால் பரமசிவம் குடும்பத்தினர் ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்குச் சென்றார்கள். குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரும் பெயிலில் வந்து ஜாலியாக பொழுதைக் கழித்து வந்தார்கள்.

இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து நீதிமன்றத்துக்குச் சென்றோம். ஆனால், நீதிபதி 19-ம் தேதிக்குத் தீர்ப்பு தேதி ஒத்திவைத்தார்.


[X] Close

[X] Close