எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது - திருநாவுக்கரசர் | more opposition in tamilnadu to modi says thirunavukarasar

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:19 (16/03/2019)

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது - திருநாவுக்கரசர்

``மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 5 வருடங்களாக தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் தமிழக மக்களைப் புறக்கணித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி ஒரு முழ்கும் கப்பல்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசு

கன்னியாகுமரியில் நாளை நடைபெற உள்ள,  காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரி செல்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் துாத்துக்குடி வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்காக அரசின் நடவடிக்கைகள் குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் இருக்கக் கூடாது. வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ, மாற்றப்பட்டாலும், உண்மைக் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வளவு வெளிப்படையாகத் தெரியும் விஷயத்தில், ``புகார் தந்தால் நடவடிக்கை எடுப்போம்” என இருக்காமல், காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. மற்ற கட்சிகளைப் போல இரவோடு இரவாக உருவான கூட்டணி இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மக்கள்  பிரச்னைகளில் களத்தில் நின்ற கட்சிகள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணிக்கு அ.தி.மு.க-விலேயே இரண்டு கருத்துகள் இருந்தது. தம்பிதுரை போன்றவர்கள் ஆரம்பத்தில் அந்தக் கூட்டணியை எதிர்த்தார்கள். கூட்டணிக்கு வரவில்லை என்றால் வழக்குகள் தயார்  என்ற நிலையில் இருந்தது. அதனால்தான், பா.ஜ.க., முதலில் ஆளுங்கட்சியை மிரட்டிப் பணிய வைத்தது.

பா.ம.க., போன்ற கட்சிகள் இரவில் ஒரு கட்சியிடம் பேசி பகலில் வேறு கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளனர். விஜயகாந்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. அவர் பகலில் 5 மணிக்கு ஒரு கட்சியிடமும் 6 மணிக்கு இன்னொரு கட்சியிடமும் கூட்டணி பேசினார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது. கடந்த 5 வருடங்களாக பா.ஜ.க. அரசு தமிழத்துக்கு எதுவும் செய்யாமல் தமிழக மக்களைப் புறக்கணித்துள்ளது. இங்கு மோடிக்கு எதிராகவும்,  அ.தி.மு.க., ஊழல் அரசுக்கு எதிராக மக்கள் உள்ளனர். இந்தக் கூட்டணி  ஒரு முழ்கும் கப்பல். எங்கள் கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெறும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close