ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பச் சென்ற வாகனம் - ரூ.76 லட்சத்தைப் பறிமுதல்செய்த பறக்கும் படை | Flying squad caught money which was taken to fill the ATM

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:20 (16/03/2019)

ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பச் சென்ற வாகனம் - ரூ.76 லட்சத்தைப் பறிமுதல்செய்த பறக்கும் படை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏ.டி.எம் மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணத்தை சமர்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்பத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

பறக்கும் படை

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்து செல்லப்பட்ட ரூ.76.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 10 -ம் தேதியிலிருந்து தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் தருவதை கண்காணிக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏ.டி.எம் மிஷின்களுக்கு பணம் நிரப்பச் சென்ற வாகனம்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என 18 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இருநாள்களில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10,23,420 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது உரிய ஆவணங்களின்றி ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.76.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் சமர்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


[X] Close

[X] Close