கால்வாயில் கவிழ்ந்த கார்... பொள்ளாச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி | Accident near pollachi - 6 death

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (13/03/2019)

கடைசி தொடர்பு:10:30 (13/03/2019)

கால்வாயில் கவிழ்ந்த கார்... பொள்ளாச்சி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

பழனி கோயிலுக்குச் சென்று விட்டு காரில் வரும்போது, பொள்ளாச்சி அருகே கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர்.

பொள்ளாச்சி  அருகே உள்ள கால்வாய் -கார் விபத்து

கோவை மசக்களிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். கேபிள் டி.வி ஆபரேட்டராக இருந்து வந்தார். இந்நிலையில், பிரகாஷ் குடும்பம், அவரது அண்ணன் பன்னீர்செல்வம் குடும்பம், பிரகாஷின் அக்கா சுமதி ஆகியோர் பழனி கோயிலுக்கு நிசான் காரில் சென்றிருந்தனர். இதையடுத்து, தரிசனம் முடித்துவிட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பொள்ளாச்சி அருகே வந்தபோது, அதிகாலை கெடிமேடு பி.ஏ.பி கால்வாயின் தடுப்புச் சுவர் மீது மோதி, கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்துள்ளது.

கார் குப்புற கவிழ்ந்து, அதில் இருந்தவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், பிரகாஷ், அவரது மனைவி சித்ரா, இவர்களது குழந்தை பூஜா(8), பிரகாஷின் அக்கா சுமதி. பிரகாஷின் அண்ணன் மனைவி லதா, லதாவின் குழந்தை தாரணி(9) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் விபத்து

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் கிரேன் மூலம் காரை வெளியில் எடுத்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


[X] Close

[X] Close